இந்த உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி தான் வெல்லுமா? ரசிகர்கள் கூறும் ஆரூடம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரை, பாகிஸ்தான் அணி கைப்பற்றும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆரூடம் கூறியுள்ளனர்.

நேற்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக ரத்தானது. இதனால் பாகிஸ்தான் அணி தான் 2019 உலகக்கோப்பையை வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் பலர், முன்பு நடந்த உலகக்கோப்பை தொடரின் (1992) முடிவை வைத்து ஆரூடம் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று உலகக்கோப்பை தொடரின், தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸுடன் படுதோல்வி அடைந்தது. கடந்த 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸிடம் படுதோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி 2019யில் இரண்டாவது லீக் போட்டியில், வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. 1992யிலும் இதுதான் நடந்தது. அதாவது அப்போது 2வது லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

அதன் பின்னர் இங்கிலாந்து உடனான போட்டி மழையால் அப்போது கைவிடப்பட்டது. இதேபோல் நேற்று நடைபெற இருந்த இலங்கை உடனான போட்டியும் மழையால் கைவிடப்பட்டது.

இவற்றை வைத்து 2019 உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி தான் கைப்பற்றும் என்று ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். இந்த கணிப்பின் படி பார்த்தால், பாகிஸ்தான் அணி அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடையும்.

மேலும், 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பை தொடரை வென்று கொடுத்த அணித்தலைவர் இம்ரான் கான், தற்போது அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். அத்துடன் தான் பிரதமராக இருக்கும்போது பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்