உலகக்கோப்பையில் மிரட்ட காத்திருக்கும் சுழல் மன்னர்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சில் மிரட்ட காத்திருக்கும் சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து காண்போம்.

இங்கிலாந்தில் வரும் 30ஆம் திகதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அங்கு தற்போது வெப்பமான காலநிலை நிலவுவதால், ஆடுகளங்கள் உலர்ந்திருக்கும். எனவே சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த உலகக்கோப்பையில் விளையாட உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து பார்ப்போம்.

இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா)

40 வயதான இம்ரான் தாஹிருக்கு இது கடைசி உலகக்கோப்பை தொடர் ஆகும். சிறப்பான சுழற்பந்து வீச்சாளரான இவர், சரியான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியவர். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்திய தாஹிர், 98 ஒருநாள் போட்டிகளில் 162 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 7/45 ஆகும்.

ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)

ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், கடந்த இரு ஆண்டுகளாக சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தக் கூடிய ரஷித், சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் 17 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதுவரை 59 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 7/18 ஆகும்.

குல்தீப் யாதவ் (இந்தியா)

இந்திய கிரிக்கெட் அணியின் துருப்பு சீட்டாக குல்தீப் யாதவ் விளங்கி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆனால், சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் இவரது ஆட்டம் சிறப்பாக இல்லை.

எனினும், சர்வதேச கிரிக்கெட் மாறுபட்டது என்பதால் இவரது தாக்கம் இந்த உலகக்கோப்பை தொடரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 43 போட்டிகளில் 86 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள இவரது சிறந்த பந்துவீச்சு 6/25 ஆகும்.

ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)

ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணியின் முக்கியமான வீரர் ஆவார். ஆல்-ரவுண்டர் வீரரான இவர், எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதில் வல்லவர். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வரும் ஷகிப், இந்த உலகக்கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 198 போட்டிகளில் 249 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 5/47 ஆகும்.

அடில் ரஷித் (இங்கிலாந்து)

31 வயதாகும் அடில் ரஷித், இங்கிலாந்து அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். இறுதிகட்ட ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதில் இவர் வல்லவர்.

இதுவரை 82 போட்டிகளில் 132 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அடில் ரஷித்தின் சிறந்த பந்துவீச்சு 5/27 ஆகும்.

ஆடம் ஸம்பா (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலிய அணியில் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பான சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ஆடம் ஸம்பா. இவரது பலமே துல்லியமாக பந்துவீசுவது தான். தனது கூக்ளி பந்துவீச்சால் துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்துபவர் ஸம்பா. இதுவரை 44 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 4/43 ஆகும்.

ஷதப் கான் (பாகிஸ்தான்)

இளம் பந்துவீச்சாளரான ஷதப் கான், பாகிஸ்தான் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக தன்னை நிலைபடுத்திக் கொண்டுள்ளார். 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணியில் இவர் இடம்பிடித்திருந்தார். இதுவரை 34 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 4/28 ஆகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்