அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்! ஐபிஎல் தொடரில் இருந்து திடீர் விலகல்

Report Print Kabilan in கிரிக்கெட்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு பஞ்சாப் அணியில், தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 8.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வருண், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் அசத்தியதன் மூலம் ஐ.பி.எல்-யில் தேர்வானார்.

பஞ்சாப் அணியில் விளையாடி வந்த வருண் சக்ரவர்த்தி, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 35 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அதன் பின்னர் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டபோது காயமடைந்தார்.

அதன் பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்காத நிலையில், தற்போது வருண் சக்ரவர்த்தி ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாக பஞ்சாப் அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘வருண் காயம் குணமடைந்து எங்களின் கடைசி கட்ட லீக் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவரின் காயம் சரியாகவில்லை. இதனால் அவர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் குணமடைய பஞ்சாப் அணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்