ரிஷாப் பண்ட்-ஐ பத்திரமாக பாத்துக்குங்க.. ஓய்வு அறிவிப்பை நான் தான் அறிவிப்பேன்! மீண்டும் ஃபார்முக்கு வந்த யுவராஜ் சிங்

Report Print Kabilan in கிரிக்கெட்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் விளாசிய யுவராஜ் சிங், இளம் வீரர் ரிஷாப் பண்ட் குறித்தும், தனது ஓய்வு முடிவு குறித்தும் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. டெல்லி அணியில் ரிஷாப் பண்ட அபாரமாக ஆடி 27 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுத்தார்.

அதேபோல் மும்பை அணியில் ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்ட யுவராஜ் சிங், அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் குவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

போட்டி முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், ‘ரிஷாப் பண்ட்யிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் மிகச்சிறந்த வீரராக உருவாகுவார். அதனால் அவரை நாம் (பி.சி.சி.ஐ) வளர்க்கும்போது பாதுகாப்பாக அவரை வழிநடத்த வேண்டும்.

உலகக் கோப்பை போட்டியில் ரிஷாப் பண்ட் இடம்பெறுவாரா என எனக்குத் தெரியாது. ஆனால், இன்றைய ரிஷப் பண்ட்-யின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது’ என தெரிவித்தார். மேலும், ஓய்வு குறித்து எண்ணம் உண்டா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த யுவராஜ் சிங்,

‘சரியான நேரம் வரும்போது, ஓய்வு அறிவிப்பை நான் தான் முதலில் அறிவிப்பேன். யாரும் என் ஓய்வு குறித்து எனக்கு நெருக்கடி கொடுக்காத வகையில் ஓய்வை அறிவிப்பேன். கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகின்றன.

இதனால் தெளிவான முடிவு எடுக்கமுடியாமல் நான் இருந்து வருகிறேன். எனக்கு நானே ஆய்வு செய்து கொண்டதில் இன்னும் சில காலம் கிரிக்கெட் போட்டியில் விளையாடலாம் என எனக்கு தோன்றியது.

நான் 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடியிருக்கிறேன். தேசிய அணிக்காக என்றில்லாமல் நான் அனுபவித்து விளையாடியிருக்கிறேன்’ என தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்