வேலைப்பளு என்பது வீரர்களுக்கு வீரர் மாறுபட்டது: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய வீரர்களின் வேலைப்பளு என்பது வீரர்களுக்கு வீரர் மாறுபட்டது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் திகதி தொடங்குகிறது. அதற்கு முன் ஐ.பி.எல் தொடர் நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும் என்பதால், இந்திய தேசிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

மேலும் உலகக் கிண்ண தொடருக்கும், ஐ.பி.எல் தொடருக்கும் இடையே குறைந்த நாட்களே இடைவெளி உள்ளது. இதனால் தேசிய அணியில் விளையாட உள்ள வீரர்கள் வேலைப்பளுவால் சோர்வடைவார்கள் என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கவலை அடைந்துள்ளது.

அத்துடன் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியும், ஐ.பி.எல் தொடரில் வீரர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் வீரர்களின் வேலைப்பளு குறித்து முன்னாள் இந்திய ஜாம்பவான் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘உலகக் கிண்ண தொடருக்கு முன் தயாராகுவது ஒவ்வொரு வீரர்களுக்கும் மாறுபட்டது. ஆகவே வேலைப்பளுவை நிர்வகிப்பதும் ஒவ்வொரு வீரர்களுக்கும் மாறுபட்டது. என்னைப் பொறுத்தவரையில் முன்னோக்கிச் செல்லும் உத்வேகம் முக்கியமானது.

ஒவ்வொரு வீரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஓய்வு தேவை என்றால், அதை சிறந்த முறையில் மதிப்பிட்டுக் கொள்ளலாம். அதனால் ஒவ்வொரு வீரர்களும் தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பும்ராவின் வேலைப்பளுவை பார்த்தீர்கள் என்றால், துடுப்பாட்டம் மட்டுமே செய்யும் விராட் கோஹ்லிக்கும், விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் டோனிக்கும் இடையில் மாறுபட்டது. அனைத்து வீரர்களுக்கும் அதிக அளவில் அனுபவம் உள்ளது. அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்