டிரெண்ட் போல்ட்-வாக்னரின் வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

Report Print Kabilan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. மழை காரணமாக முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் ரத்தானது. இதனால் 3வது நாளில் வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது.

அந்த அணி 211 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 74 ஓட்டங்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் வாக்னர் 4 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 432 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ராஸ் டெய்லர் 200 ஓட்டங்களும், ஹென்றி நிக்கோலஸ் 107 ஓட்டங்களும் குவித்தனர். இதனைத் தொடர்ந்து வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

டிரெண்ட் போல்ட் மற்றும் வாக்னர் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணியின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. மக்மதுல்லா மட்டும் 67 ஓட்டங்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆனதால், வங்கதேச அணி 209 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்மூலம், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் வாக்னர் 5 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் 16ஆம் திகதி நடைபெற உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers