அணியில் உள்ள 11 பேருக்காக நான் பேட்டிங் செய்ய முடியாது! படுதோல்வியால் கொந்தளித்த இங்கிலாந்து கேப்டன்

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணியில் உள்ள வீரர்களுக்கு தாம் பேட்டிங் செய்ய முடியாது என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஜ்டவுனில் நடந்த முதல் டெஸ்டிலும், ஆண்டிகுவாவில் நடந்த 2வது டெஸ்டிலும் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து அணி தொடரை இழந்தது.

குறிப்பாக 2வது டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் கூறுகையில்,

‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு இன்னிங்சிலும் 200 ஓட்டங்களுக்கு குறைவாக அடித்தால் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற இயலாது. ஆகவே, இந்த துயரத்தில் இருந்து வெளியே வர வேண்டும். இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வலிமையாக திரும்ப வேண்டும்.

நாங்கள் போதுமான ஓட்டங்கள் குவிக்கவில்லை. அனுபவமான வீரர்கள் 50 ஓட்டங்களுக்கு மேல் அடிக்காத நிலையில், மற்ற வீரர்கள் ஓட்டங்கள் குவிப்பது மிகவும் கடினம். இரண்டு டெஸ்டிலும் செய்ததை விட சிறப்பாக செயல்பட முயற்சி செய்ய வேண்டும். அல்லது சில விடயங்களில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்த வாய்ப்புகள் தனி வீரர்களிடம் இருந்து வர வேண்டும்.

நான் 11 வீரர்களுக்காக பேட்டிங் செய்ய இயலாது. அதேபோல் தலைமை பயிற்சியாளரான பெய்லிஸ் அல்லது பேட்டிங் பயிற்சியாளர் மார்க் ராம் பிரகாஷ் வந்து பேட்டிங் செய்ய இயலாது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குழுவாக ஒன்று சேர்ந்து அடுத்த டெஸ்டில் வலிமையாக திரும்ப பதிலடி கொடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers