ஸ்டார்க்கின் புயல்வேக பந்துவீச்சில் சரிந்த இலங்கை! தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டிலும் தோல்வியடைந்ததால், இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியடைந்தது.

அதனைத் தொடர்ந்து கான்பெராவில் 2வது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடியது. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 534 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ பர்ன்ஸ் 180 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 161 ஓட்டங்களும் குவித்தனர்.

AP Photo

பின்னர் ஆடிய இலங்கை அணி 215 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அந்த அணியில் கவாஜா 101 ஓட்டங்களும், ஹெட் 59 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன் மூலம் இலங்கை அணிக்கு 516 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் ஸ்டார்க், கம்மின்ஸின் புயல்வேக பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். தொடக்க வீரர் திரிமன்னே 30 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 42 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேலும் விக்கெட் கீப்பர் டிக்வெல்ல(27), கருணரத்னே(22) ஆகியோரைத் தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் அவுட் ஆனதால், இலங்கை அணி 51 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன் மூலம் அவுஸ்திரேலியா 366 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா வென்றது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்