ஏய் கருப்பனே என நிறவெறி காட்டிய பாகிஸ்தான் கேப்டன்! அதிரடி நடவடிக்கை எடுத்த ஐசிசி

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பெலுக்வேயோவை நிறவெறியுடன் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்பராஸ் அகமது மீது ஐ.சி.சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த 2வது ஒருநாள் போட்டியின்போது, பாகிஸ்தான் கேப்டன் சர்ப்பராஸ் அகமது களத்தில் துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்த தென் ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோவை நோக்கி நிறவெறியுடன் பேசினார்.

இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ப்பராஸ் அகமது மன்னிப்பு கேட்டார். யாரையும் வருத்தமடையச் செய்யும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சகோதரத்துவ உணர்வுடன் செயல்படுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தென் ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோவை நேரடியாக சந்தித்து மன்னிப்பு கேட்டு சர்ப்பராஸ் அகமது சமரசமானார். இந்நிலையில், களத்தில் நடந்த சம்பவங்களை அறிக்கையாக போட்டி நடுவர் ஐ.சி.சியிடம் அளித்ததைத் தொடர்ந்து, சர்ப்பராஸ் அகமது மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அடுத்த 4 போட்டிகளில் சர்ப்பராஸ் அகமது விளையாட தடை விதித்து ஐ.சி.சி உத்தரவிட்டுள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளிலும் சர்ப்பராஸால் விளையாட முடியாது.

இதுதொடர்பாக ஐ.சி.சியின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் கூறுகையில், ‘நிறவெறியுடன் நடந்துகொள்வதிலும், பேசுவதிலும் ஐ.சி.சி எந்த விதத்திலும் யாரையும் சமரசம் செய்து கொள்ளாது. சர்ப்பராஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தன்னுடைய செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்டு, வெளிப்படையாகவும் மன்னிப்பு கோரிவிட்டார். இதைக் கருத்தில் கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறவெறிக்கு எதிரான விதிமுறைகள் பிரிவு 7.3-யின் படி, சர்ப்பராஸ் அகமது நிறவெறி விழிப்புணர்வு குறித்த பயிலரங்குக்கு செல்ல வேண்டும். இது குறித்து ஐ.சி.சியின் பாகிஸ்தான் வாரியத்துடன் கலந்து பேசி எப்போது எப்படி நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்