இரண்டு ஆண்டுகளுக்கு பின் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் மைதானம்! உற்சாகத்தில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர்

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்தின் நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானம் புதுப்பொலிவுடன் தயாரானதைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் உற்சாகமடைந்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்காக இந்த மைதானம் புதுப்பொலிவுடன் தயாராகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பின்னர் இந்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. கடைசியாக அவுஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இங்கு நடந்தபோது, மழை காரணமாக களம் ஈரமாக இருந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆனால், 4 மணிநேரம் ஆகியும் மைதானம் ஈரமாகவே இருந்ததால் அந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதனால் மைதானத்தின் மழைநீர் வடிகால் வசதி கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதன் பின்னரும் தென் ஆப்பிரிக்காவுடன் நடக்க இருந்த ஒரு போட்டியும் இதே காரணத்திற்காக ஹாமில்டனுக்கு மாற்றப்பட்டதால், நேப்பியர் மைதானத்திற்கான அங்கீகாரத்தை ஐ.சி.சி ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது ஆடுகளம், மைதானம், பார்வையாளர் மாடங்கள், வடிகால் வசதி என அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் புணரமைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் சர்வதேச போட்டிக்கு புதுப்பொலிவுடன் நேப்பியர் மைதானம் தயாராகியுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர் இந்த மைதானம் குறித்து கூறுகையில், ‘நீண்ட இடைவெளிக்கு பின் சொந்த ஊரில் விளையாட உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும்.

ஆனால், இந்திய அணி இங்கு வந்து விளையாடும்போது நிலைமை வேறு. நியூசிலாந்தில் இருக்கும் இந்திய ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு தங்கள் அணியை ஆதரிக்கும்போது, ஸ்டேடியம் நிரம்பி வழியும்.

சில சமயங்களில் நியூசிலாந்து ரசிகர்களை விட இந்திய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

புதுப்பிக்கப்பட்ட ஸ்டேடியத்தில் விளையாட நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆடுகளத்தின் தன்மை குறித்து இப்போது எதுவும் கணிக்க முடியாது. 300 ஓட்டங்கள் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதில்லை.

அதற்கு குறைவான ஸ்கோர் அடித்தால் கூட போதுமானது. ஆடுகளம் சற்று கடினமானதாக இருந்தாலும் பொறுமையாக விளையாடினால் ஓட்டங்கள் குவிக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்