தனியாளாய் போராடிய குசால் பெரேரா.. சரிந்த விக்கெட்டுகளால் வீழ்ந்த இலங்கை அணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிராக பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில், மூன்றோ ஆகியோர் களமிறங்கினர். மூன்றோ 13 ஓட்டங்களில் மலிங்கா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதன் பின்னர் வந்த கேப்டன் வில்லியம்சன், தொடக்க வீரர் கப்திலுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களின் பார்ட்னர்ஷிப் மூலம் நியூசிலாந்தின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. அரைசதம் அடித்த வில்லியம்சன் 76 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த ராஸ் டெய்லர் அதிரடியில் இறங்கினார். இதன்மூலம் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

கப்தில் சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் சதமடித்தார். 139 பந்துகளில் 5 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் கப்தில் 138 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் டெய்லர் 37 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய நீஷம் 13 பந்துகளில் 6 சிக்சருடன் 47 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 371 ஓட்டங்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் மலிங்கா, பிரதீப் மற்றும் திசாரா பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியில் இறங்கியது. டிக்வெல்ல நியூசிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். மற்றொரு தொடக்க வீரர் குணதிலகா 62 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் வந்த குசால் பெரேராவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அரைசதம் கடந்த டிக்வெல்ல 50 பந்துகளில் 3 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது.

குசால் மெண்டிஸ்(18), சண்டிமல்(10) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், குசால் பெரேரா நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார்.

அணியின் ஸ்கோர் 298 ஆக இருந்தபோது, சதம் விளாசிய பெரேரா 102 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதில் ஒரு சிக்சர் மற்றும் 13 பவுண்டரிகள் அடங்கும்.

பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இலங்கை அணி 49 ஓவர்களில் 326 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த தரப்பில் நீஷம் 3 விக்கெட்டுகளையும், பெர்குசன், போல்ட் மற்றும் சோதி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்