இலங்கை அணி இப்படி மோசமாக போனதற்கு முன்னணி வீரர்களின் ஓய்வு காரணமா? தலைவர் மலிங்கா சொன்ன பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருவதால், இதற்கு முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்றது தான் என்று கூறப்பட்ட நிலையில், இலங்கை அணியின் தலைவர் மலிங்கா அது காரணமில்லை என்று கூறியுள்ளார்.

இலங்கை அணி கடந்த 3 ஆண்டுகளாக அந்தளவிற்கு சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என அணியில் வீரர்களை ஒவ்வொரு முறையும் மாற்றி எடுத்தாலும், அணியின் வெற்றிக்கு அது உதவுவதில்லை, வீரர்களை துடுப்பாட்ட வரிசையில் மாற்றி இறக்கினாலும் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை.

இப்படி இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதற்கு முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்றது தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு தலைவராக இருக்கும் மலிங்கா இது குறித்து கூறுகையில், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுபெற்று மூன்று வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது.

அதனால் அவர்களின் ஓய்வானது உலகக் கிண்ண தயார்படுத்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அதுமட்டுமின்றி, உலகக் கோப்பைக்கான அணியை தயார்படுத்தவதற்கான காலமும் இது இல்லை. அதற்கான காலம் முடிந்துவிட்டது. நாம் இப்போது அணியில் யார் சிறந்த வீரர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டயாத்தில் உள்ளோம்.

இலங்கை அணி இறுதியாக சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை இழந்த நிலையில், இன்று நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.

குறித்த தொடர்களின் இறுதிப் பகுதிகளில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நாம் விளையாடிய கடைசி இரண்டு தொடர்களினதும் இறுதிப் பகுதியில் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியிருந்தோம். ஆனால், இந்த தொடரின் ஆரம்பத்தில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இலங்கை அணிக்கு இந்த தொடரை தவிர்த்து 8 போட்டிகள் இருக்கின்றன. குறித்த 8 போட்டிகளும் உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ள இங்கிலாந்தின் ஆடுகளங்களைக் கொண்ட மைதானங்களிலேயே நடைபெறவுள்ளன. இதனால் இது உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் மைதானங்களில் நிலையை அறிய உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers