கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.. விடைபெற்ற இந்திய வீரர் கம்பீர்! உருக்கமான வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கடந்த 2003ஆம் இந்திய ஒருநாள் போட்டி அணியில் அறிமுகமான கவுதம் கம்பீர், அதற்கு அடுத்த ஆண்டு டெஸ்டிலும் களம் கண்டார். அதன் பின்னர் 2007ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் அடியெடுத்து வைத்தார்.

டெஸ்ட் போட்டியில் சேவாக்குடன் இணைந்த பலமான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தவர் கம்பீர். 58 டெஸ்ட்களில் விளையாடிய இவர், 9 சதம் மற்றும் 22 அரை சதங்களுடன் 4,154 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.

அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் மிகச் சிறந்த தொடக்க வீரராக செயல்பட்ட கம்பீர், எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தல் தரும் பேட்ஸ்மேனாக விளங்கினார். இந்திய அணிக்காக 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,238 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 11 சதம் மற்றும் 34 அரை சதங்கள் அடங்கும்.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டில் ஒருநாள் அணியில் கம்பீருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் விளையாடிய கடைசி டெஸ்ட் 2016ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியாகும்.

அதன் பின்னர் கம்பீருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து, இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கொடுத்துள்ளார்.

ஆனால், கடந்த ஐ.பி.எல் தொடரில் சொதப்பியதால் தாமாகவே கேப்டன் பதவியை துறந்து வெளியேறினார். மேலும் ரஞ்சி, துலீப் டிராபி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நிலையிலும், பிசிசிஐ அவரை தொடர்ந்து புறக்கணித்தது.

அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி கம்பீரை விடுத்தது. இந்நிலையில், இதுதான் சரியான தருணம் என்று எண்ணிய கம்பீர் நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ‘மிகுந்த கனத்த இதயத்துடன், மிகவும் கடினமான இந்த முடிவை எடுத்திருக்கிறேன். என்னுடைய அனைத்து விதமான கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்தும் ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்துவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘15 ஆண்டுகள் நான் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடிய நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும், அழகான இந்த விளையாட்டில் இருந்தும் இந்த கம்பீர் ஓய்வு பெறுகிறேன்.

வலிகள், வேதனைகள், தோல்விகள் இருந்தாலும் கூட அடுத்தக்கட்ட வாழ்க்கையை நோக்கி நகர்கிறேன்’ என தெரிவித்துள்ளார். 37 வயதாகும் கம்பீர், இதுவரை 37 டி20 போட்டிகளில் விளையாடி 7 அரை சதங்களுடன் 932 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

தற்போது ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் கம்பீர், வரும் 6ஆம் திகதி ஆந்திரா மாநிலத்துக்கு எதிராக விளையாடுவதே அவரது கடைசி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்