சொந்த மண்ணில் மோசமாக தோல்வியடைந்த இலங்கை! மூன்று கிண்ணத்தையும் அள்ளிச் சென்ற இங்கிலாந்து

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வென்றிருந்த நிலையில், கடைசி போட்டி கடந்த 23ஆம் திகதி தொடங்கியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 336 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 240 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கருணரத்னே அதிகபட்சமாக 83 ஓட்டங்கள் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 230 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இலங்கைக்கு 327 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய இலங்கை, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 4ஆம் நாளான இன்று களமிறங்கிய இலங்கை அணியில், சன்டகன் 7 ஓட்டங்களில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த ரோஷன் சில்வா, நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருந்த குசால் மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. அரைசதம் கடந்த குசால் மெண்டிஸ் 86 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரன்-அவுட் ஆனார். அவருக்கு பின் வந்த டிக்வெல்ல மற்றும் தில்ரூவன் பெரேரா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரோஷன் சில்வா அரைசதம் அடித்தார். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 226ஆக இருந்தபோது, மொயீன் அலியின் பந்து வீச்சில் ரோஷன் சில்வா (65) அவுட் ஆனார்.

கடைசி விக்கெட்டுக்கு இணைந்த லக்மல் மற்றும் புஷ்பகுமாரா இருவரும் வெற்றிக்காக போராடினர். புஷ்பகுமாரா அதிரடியாக விளையாட, லக்மல் நிதான ஆட்டத்தினை கடைபிடித்தார்.

இந்நிலையில் ஜேக் லீச்சின் பந்துவீச்சில், 11 ஓட்டங்கள் எடுத்திருந்த லக்மல் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. புஷ்பகுமாரா 42 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி, ஜேக் லீச் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஏற்கனவே இரண்டு டெஸ்ட்களிலும் வெற்றி பெற்றிருந்ததால், இலங்கை அணியை இங்கிலாந்து ஒயிட் வாஷ் செய்துள்ளது. அத்துடன் டி20, ஒருநாள் தொடர்களையும் இங்கிலாந்து ஏற்கனவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Reuters

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்