டோனி ஓய்வை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை! கொந்தளித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

டோனியை ஓய்வு பெறுமாறு கூற யாருக்கும் உரிமை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர டோனி, தற்போது விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஒருநாள் போட்டி உலகக் கிண்ணம், டி20 உலகக் கிண்ணங்களை வென்று கொடுத்து பல சாதனைகளை படைத்தவர் டோனி.

கடந்த 2014ஆம் ஆண்டில் டெஸ்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகி தற்போது ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவரது பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் டோனி நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் டோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்நிலையில் டோனிக்கு ஆதரவாக, பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்,

‘இந்திய அணிக்காக டோனி என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். சாதனைகளை புரிந்தவர். இதனால் டோனி ஓய்வு பெற வேண்டும் என்று அவரிடம் கூறும் உரிமை யாருக்கும் இல்லை. 2019 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணிக்கு அவர் தேவை.

அப்போது தான் இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கும். எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவராக விராட் கோஹ்லி இருக்கிறார். அவரது ஆட்டம் எனக்கு பிடிக்கும். ஆனாலும் கேப்டன் பதவியில் அவர் இன்னும் நிறைய முன்னேற வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் கேப்டன் பதவியில் டோனி தான் சிறந்தவர். இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான தொடர் அற்புதமாக இருக்கும். அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியா முயற்சி செய்யும். இந்திய அணி வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்