ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்: கடைசி வரை 5 விக்கெட் எடுக்காத பரிதாபம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2006ஆம் இந்திய அணியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல்(35), தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தொடர்ந்து ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிய முனாப் படேலினால், காயம் மற்றும் ஆட்டத்திறன் காரணமாக இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் போனது.

எனினும், 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் ஜாகீர் கான், யுவ்ராஜுக்கு அடுத்ததாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரை ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது சிறப்பான விடயமாகும். ஆனால், முனாப் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை மட்டுமே ஒரே போட்டியில் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்டில் இவரது சிறந்த பந்துவீச்சு 4/25, ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு 4/29 ஆகும். முனாப் படேல் இதுவரை 70 ஒருநாள் போட்டிகளில் 86 விக்கெட்டுகளையும், 13 டெஸ்ட் போட்டிகளில் 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முனாப் படேல் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ’நான் விளையாடிய வீரர்களில் டோனியைத் தவிர அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். மற்றவர்கள் விளையாடி நான் மட்டும் ஓய்வு பெற்றால் மட்டுமே வருத்தமாக இருக்கும்.

எனவே, தற்போது வருத்தங்கள் எதுவும் இல்லை. நான் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறேன் என்பதையும் என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு கிரிக்கெட் தவிர எதுவும் தெரியாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்