விக்கெட் கீப்பருக்கு எதற்கு கூலிங் கிளாஸ்? டோனியை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

டோனி விக்கெட் கீப்பிங்கிற்கு உத்தி தேவையில்லை என்பதை நிரூபித்துவிட்டதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி விமர்சித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி. இவர் கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது, சிறந்த விக்கெட் கீப்பர் என்ற விருதினை வென்றார்.

இந்நிலையில் விக்கெட் கீப்பிங்கில் தற்போது எவரும் உத்திகள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும், டோனி அதனை நிரூபித்துவிட்டதாகவும் கிர்மானி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிர்மானி கூறுகையில், விக்கெட் கீப்பிங் என்பது ஒரு சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த ஒரு துறை. இப்போது உத்தியெல்லாம் கவலையில்லை. டோனி இதனை நிரூபித்துவிட்டார். ரிஷாப் பண்ட் போன்ற இளம் விக்கெட் கீப்பர்கள் எல்லாம் டோனியைப் பின்பற்றுகின்றனர்.

இதனால் உத்தி பற்றி கவலைப்படுவதில்லை. இது தவறான போக்கு. ஆனால் இதுதான் இன்று எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘விக்கெட் கீப்பிங்கில் திறமை என்பது பின் இருக்கைக்கு சென்றுவிட்டது. ஒருநாள் கிரிக்கெட் வந்த பிறகே ஒரு சிறப்பு விக்கெட் கீப்பர் பேட்டிங்கிலும் பிரகாசிக்க வேண்டியுள்ளது.

டி20 வந்த பிறகு கேட்கவே வேண்டாம். இன்னும் ஒருபடி மேலே போய்விட்டது. கீப்பிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்று நினைக்கிறார்கள். விக்கெட் கீப்பர் என்பவர் பிறக்க வேண்டும் என்று சிலர் கூறுவார்கள்.

இப்போது இளைஞர்கள் யார் முதன்மையில் இருக்கிறாரோ அவரைப் பின்பற்றுகின்றனர். அதனால் தான் இளம் விக்கெட் கீப்பர்கள் டோனியைப் பின்பற்றுகின்றனர். ஆனால், விக்கெட் கீப்பிங்கில் நிச்சயமான உத்தி இல்லையெனில் அம்பலப்பட்டுப் போவோம்.

இப்போதெல்லாம் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு கீப்பிங் செய்கிறார்கள். இயல்பான நல்ல பார்வை இருக்கும்போது எதற்காக கூலிங் கிளாஸ்? கூலிங் கிளாஸினால் விநாடிக்கும் குறைந்த கால அளவு பந்து கண்ணுக்கு தெரியாமல் போக வாய்ப்புண்டு, கேட்சை விட வாய்ப்புண்டு, ஸ்டம்பிங் பறிபோக வாய்ப்புண்டு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers