இந்தியாவை திணறடித்த ஆப்கான் அணி: வெற்றியை தடுத்து அபாரம்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ஆசிய கிண்ணம் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

ஆசிய கிண்ணம் தொடரில் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றுள்ளது. நாணயசுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அஹ்மதி மிகவும் மந்தமாக விளையாடிய நிலையில் முகமது ஷேசாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து பவுண்டரிக்கும், சிக்சருக்கும் என பறந்தது.

ஒருபுறம் ஷேசாத் அபாரமாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணமே இருந்தது.ஆட்டத்தின் 29-வது ஓவரை சாஹர் வீசினார்.

இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி முகமது ஷேசாத் 88 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்தார்.தொடர்ந்து விளையாடிய ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

நைப்(15), நஜிமுல்லா சத்ரன்(20) ஓட்டங்களும் அடித்தனர். முகமது நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ஓட்டங்கள் விளாசினார்.

முகமது ஷேசாத், முகமது நபி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ஓட்டங்கள் சேர்த்தது.

இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 253 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

253 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் லோகேஷ் ராகுல், அம்பத்தி ராயுடு ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இந்த ஜோடியின் சிறந்த துவக்கத்தின் மூலம் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அதில் அதிரடி காட்டிய ராயுடு 43 பந்துகளில் தனது அரை சதத்தினை பதிவு செய்து அசத்தினார்.

அப்போது எதிர்பாராத விதமாக ராயுடு 57(49) ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதை அடுத்து லோகேஷ் ராகுல் தனது அரை சதத்தினை பதிவு செய்திருந்த நிலையில் 60 (66) ஓட்டங்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும், அணித்தலைவர் டோனியும் ஜோடி சேர்ந்தனர். அதில் டோனி 8(17) ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 8(15), கேதர் ஜாதவ் 19(25) ஓட்டங்களிலும் வெளியேறினர். சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக், அரைசதம் அடிப்பார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44(66) ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய தீபக் சாகர் 12(14), குல்தீப் யாதவ் 9(11) , சித்தார்த் கெளல் (0) ஓட்டங்களில் வெளியேறினர். கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா 4 ஓட்டங்கள் அடித்து அசத்தினார். கடைசி பந்தில் ஜடேஜா பந்தினை தூக்கி அடிக்க அது கேட்ச் ஆனது.

முடிவில் ஜடேஜா 25(34), கலில் அஹமது 1(1) ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 49.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்கள் சேர்த்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி, அஃப்டாப் ஆலம், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அஹ்மாதி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers