சுளுக்கெடுத்த அஷ்வின்: சீட்டுக்கட்டாக சரிந்த இங்கிலாந்து

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுக்கு 285 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இதனையடுத்து அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஷ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

9-வது ஓவரை அஷ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ஓட்டங்கள் சேர்த்தார்.

அடுத்து ஜென்னிங்ஸ் உடன் அணித்தலைவர் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் அரைசதம் அடித்தார். 43 ஓட்டங்களைத் தொடும்போது டெஸ்ட் போட்டியில் ஆறாயிரம் ஓட்டங்களைத் தொட்டார் ஜோ ரூட்.

அத்துடன் டெஸ்ட் போட்டியில் குறைந்த நாட்களில் (2058) 6 ஆயிரம் ஓட்டங்களை தொட்டு வேகமாக அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அணியின் ஸ்கோர் 88 ஆக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்க்ஸ், முகமது ஷமி வீசிய 35-வது ஓவரின் முதல் பந்தில் க்ளீன் பௌல்டாகி பெவிலியன் திரும்பினார்.

அவர், 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து வந்த மாலன் 8 ஓட்டங்களில் ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 112 ஓட்டங்கள் அடித்திருந்தது.

அடுத்து, ஜோ ரூட்டுடன், பய்ர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஒரு கட்டத்தில் இவர்களை வீழ்த்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறிய நிலையில் இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் குவித்தனர்.

ஜோ ரூட் 80 ஓட்டங்களில் விராட் கோஹ்லியிடம் ரன் அவுட் ஆக, பய்ர்ஸ்டோ, உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து, அடுத்து களமிறங்கிய பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும், பென் ஸ்டோக்ஸ் 21 ஓட்டங்களிலும் அஷ்வின் வீசிய சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 285 ஓட்டங்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது.

அந்த அணியில், கரன் 24 ஓட்டங்களுடனும், ஆண்டர்சன் ரன் ஏதும் அடிக்காமலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்

இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார். ஷமி 2 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers