ரணதுங்கா மற்றும் அரவிந்தா டி சில்வா மீது சூதாட்ட புகார்! இலங்கை கிரிக்கெட்டில் வெடித்த மற்றொரு சர்ச்சை

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலா, இலங்கையின் முன்னாள் வீரர்களான அர்ஜுன ரணதுங்கா மற்றும் அரவிந்த டி சில்வா மீது Match Fixing குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அர்ஜுனா ரணதுங்கா, தற்போது அமைச்சராக உள்ளார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா. இவர்கள் இருவரும், கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் விளையாடினர்.

இந்நிலையில், ரணதுங்கா மற்றும் அரவிந்த டி சில்வா மீது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபாலா, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இவர்கள் Match Fixing செய்ததாக குற்றஞ்சாட்டவர்கள் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘அர்ஜுனா மற்றும் அரவிந்த ஆகியோரது பெயர்கள், குப்தா என்ற நபரிடம் இருந்து 15,000 டொலர்கள் பெற்றதாக அடிபட்டது’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டு எந்த ஆதாரமும் இதுவரை சமர்பிக்கப்படவில்லை. பல ஆண்டுகள் கழித்து தற்போது ஏன் சுமதிபாலா இவர்கள் மீது இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முன்பு, சுமதிபாலா மற்றும் அவரது குடும்பத்தினர் Match Fixing தரகர்களோடு தொடர்பில் இருந்தார்கள் என அர்ஜுனா ரணதுங்கா குற்றஞ்சாட்டினர். மேலும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கு சுமதிபாலா தான் காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே தான் சுமதிபாலா தற்போது ரணதுங்கா மீது இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்றும், இது அரசியல் மோதல் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அரவிந்த டி சில்வாவின் பெயரை எதற்கு சுமதிபாலா குறிப்பிட்டுள்ளார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே, பந்தை சேதப்படுத்தியதால் சண்டிமலின் மீதான தடை, ஐ.சி.சியின் விதி மீறலுக்கு இலங்கை வீரர்கள் உள்ளானது மற்றும் தனுஷ்கா குணதிலகா மீதான ஒழுங்கீன நடவடிக்கை என பல சர்ச்சைகளில் இலங்கை அணி சிக்கி வருகிறது.

இந்நிலையில், முன்னாள் வீரர்களான அர்ஜுனா ரணதுங்கா, அரவிந்த டி சில்வா மீதான இந்த குற்றச்சாட்டு மேலும் இலங்கை கிரிக்கெட்டில் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்