எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை: கொந்தளித்த இங்கிலாந்து வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித், தனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஆகஸ்ட் 1ஆம் திகதி இங்கிலாந்து-இந்தியா அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன. இந்த டெஸ்டிற்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் முதல் தர போட்டிகளில் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் இடம்பெற்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய ரஷித், கோஹ்லிக்கு அச்சுறுத்தும் வகையில் பந்துவீசியுள்ளார்.

ஆனால், கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடாத ரஷித்தை டெஸ்ட் அணியில் சேர்த்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான மைக்கேல் வாகனும், நான்கு நாள் ஆட்டத்தில் கலந்து கொள்ளாத வீரரை டெஸ்ட் அணிக்கு சேர்த்துக் கொண்டதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன் மீதான விமர்சனங்கள் குறித்து அடில் ரஷித் கூறுகையில் ‘மைக்கேல் வாகனின் கருத்துக்களை யாரும் பொருட்படுத்துவதில்லை. அவர் என்ன சொல்கிறார் என்பதில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை.

சில சமயங்களில் முன்னாள் வீரர், தற்போது விளையாடும் வீரர்கள் குறித்து மோசமாக கருத்து கூறிவிடுவார்கள். உங்களுக்குக்கான வெறுப்பாளர்கள் எப்போதும் இருப்பார்கள். இது என் தவறு அல்ல.

நான் தவறு எதுவும் செய்யவில்லை. உங்கள் நாட்டு மக்களிடமிருந்தும் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அத்தகைய ஆதரவை அவர்கள் தராதது அவர்களுடைய பிரச்சனை.

இச்சமயத்தில் எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. என்ன செய்து சாதிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். நூறு சதவிதம் என் உழைப்பை செலுத்தினால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

என்னை இது போல நடத்துவதின் மூலம் எனக்கு அவமரியாதை ஏற்படுத்துகிறார்கள். எந்த நாட்டுக்காக நான் விளையாட வேண்டும் என்பதை நான் யோசிக்க வேண்டியிருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்