இங்கிலாந்தில் சட்டையை கழற்றியது ஏன்? 16 ஆண்டு ரகசியத்தை உடைத்த கங்குலி

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியின்போது சட்டையை கழற்றி சுழற்றியது ஏன் என்று, இந்திய முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி தற்போது தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்து-இந்தியா அணிகள் நாட் வெஸ்ட் தொடரில் மோதின. இந்த தொடரில் நடந்த போட்டி ஒன்றில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்ற போது, அப்போதைய இந்திய அணித்தலைவர் சவுரவ் காலரியில் எழுந்து நின்று தனது சட்டையை கழற்றி சுழற்றினார்.

இந்த விடயம் அன்றைய சூழலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. கங்குலி இப்படி செய்ததற்கு காரணம், இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரின் போது இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளிண்டஃப், தனது சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடியதற்கு பழி தீர்க்கத்தான் என்று பேசப்பட்டது.

ஆனால், இதுகுறித்து கங்குலி பெரிய அளவில் விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. இந்நிலையில், இணைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கங்குலி அந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘நான் வலது பக்கம் நின்று இருந்தேன். வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் என் இடப்பக்கமும், ஹர்பஜன் என் பின்புறமும் இருந்தார்கள். நான் சட்டையை கழற்றிக் கொண்டு இருந்தபோது, லக்‌ஷ்மண் ‘’இதை செய்ய வேண்டாம், செய்ய வேண்டாம்’’ என்று கூற முயன்றார்.

சட்டையை கழற்றிய பிறகு ஹர்பஜன் ‘’இப்போது நான் என்ன செய்வது?’’ என கேட்டார். அதற்கு, ‘’நீயும் சட்டையை கழற்று’’ என கூறினேன். அந்த நேரத்தில் தான் இந்த யோசனை எனக்கு வந்தது.

வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து தொடரை 3-3 என சமன் செய்த போது, ஆண்ட்ரூ பிளிண்டஃப் தன் சட்டையை கழற்றி கொண்டாடினார். அதே போல நானும் லார்ட்ஸ் மைதானத்தில் ஏன் செய்யக்கூடாது என எண்ணினேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த சம்பவம் எனக்கு சங்கடமாகக் கூட இருக்கிறது. ஒருமுறை என் மகள் ‘’அதை ஏன் செய்தீர்கள்? கிரிக்கெட்டில் இது போல செய்ய வேண்டுமா?’’ என கேட்டார்.

‘’இல்லை. ஒரு முறை நான் தவறுதலாக இப்படி செய்து விட்டேன்’’ என கூறினேன். சில சமயம், வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் நம் கட்டுப்பாடு இல்லாமலேயே நடந்து விடுகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...