சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராமின் 14வது நினைவேந்தல் நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் தராகி என்றழைக்கப்படும் த.சிவராமின் 14வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகே நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழு நேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990 களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியுள்ளார்.

தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வந்த சிவராம் அதற்காக பல்வேறு நெருக்கடிகளையும், எதிர்ப்புக்களையும் சந்தித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்து அதனை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற பெருமை தராகி சிவராமையே சார்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்