நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்

Report Print Navoj in சமூகம்

கல்குடா

குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கல்குடா தமிழ் பிரதேசங்களில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கல்குடா மற்றும் பாசிக்குடா பொது மக்களின் ஏற்பாட்டில் பாசிக்குடாவில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு ஈகைச் சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சர்வதமத குருமார்களினால் பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன், உயிரிழந்தோரின் ஆத்ம சாந்தி வேண்டி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் பிரதேசங்களின் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிர் நீத்தவர்களுக்காகவும், நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இன்று விசேட திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் பொது சுமார் 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதோடு, பல நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் குறிப்பாக நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டு திருப்பலியை ஒப்புக்கொடுத்துள்ளனர்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் குறித்த திருப்பலி இடம்பெற்ற போது பொலிஸார்,இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் விசேட பாதுகாப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது திருப்பலி நேரத்தில் ஆலயத்திற்குள் செல்ல மக்களுக்கு படையினர் அனுமதியை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

உயிர் நீத்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

மன்னார்மாவட்டச் செயலகத்திற்கு முன் நேற்று காலை நினைவேந்தல் நிகழ்வுஇடம்பெற்றுள்ளது.

குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த அனைத்துமக்களின் ஆன்மா சாந்தி பெற வேண்டும் எனும் நோக்குடன் பொது வழிபாட்டுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.


கல்முனை

கல்முனை மாநகரில் தமிழத் தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் 4 இடங்களில் ஆத்மார்த்த அஞ்சலியும் சுடரேற்றும் வைபவமும் நேற்று இரவு நடைபெற்றுள்ளன.

கல்முனையின் பல இடங்களில் துப்பரவு செய்யப்பட்டு கறுப்பு, வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு பதாதைகள் தொங்கவிடப்பட்டு சுடரேற்றும் வைபவம் 4 இடங்களில் நடைபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதி வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது


பட்டிருப்பு

கடந்த உயிர்த்த ஞாயிறு திகத்தன்று இலங்கையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் மரணமடைந்த 359 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் களுவாஞ்சிகுடி பேருந்து தரிப்பிடத்தில் 359 ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நவோஜ்,ஆசிக்,சதாதேவராஜா,ருஸாத்,

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers