திருக்கேதீஸ்வரம் ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Ashik in சமூகம்

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமையை கண்டித்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட செயலக பிரதான வீதியின் இரு பகுதிகளிலும் பல நூற்றுக்கணக்கான இந்து மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளையும், நந்தி கொடியினையும் கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் தர்ம குமார குருக்கள் தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையினர், இந்து மத குருக்கள், இந்து மக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் பின் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்றாசிடம் கோரிக்கை அடங்கிய மகஜரொன்றும் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் செயலாளரினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மகஜரை பெற்று கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் அதனை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்