படப்பிடிப்பு தளத்தில் நடந்த நிஜ கத்திக்குத்து சம்பவத்தால் பரபரப்பு!

Report Print Vijay Amburore in சினிமா

பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிஜ கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ஏராளமான தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது சார்லி சாப்லின் 2, பொன்மாணிக்கவேல், தேவி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் அறிமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கத்தில், பிரபுதேவா - லட்சுமி மேனன் நடிக்கும் 'யங் மங் சங்' என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய படப்பிடிப்பின் மதிய உணவு இடைவேளையின் போது, அருகில் இருந்த கோயில் மண்டபத்தில் வைத்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

அப்போது அங்கு வந்த உள்ளூர்வாசிகள் இருவர், தங்களுக்கும் உணவு பரிமாற வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் திடீரென அங்கிருந்த சமையல் கத்தியை எடுத்த அந்த இரு நபர்கள் உணவு பரிமாறுபவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ந்து போன சக ஊழியர்கள் அந்த இரு நபர்களையும் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையில் படுகாயமடைந்த அந்த நபர் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்