மகனை கொல்ல முயன்ற தந்தை... காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த தாய்: நடந்தேறிய சோகம்

Report Print Vijay Amburore in கனடா

கனடாவில் ஆற்றில் குதித்து 5 வயது மகனை காப்பாற்ற முயன்ற தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கனடாவை சேர்ந்த 28 வயதான ஜோஷாவா ரேமண்ட் என்பவருக்கும், அவருடைய மனைவி அமண்டாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜோஷாவா, தங்களுடைய 5 வயது மகனை தூக்கிக்கொண்டு நயாகரா ஆற்றில் தற்கொலை செய்துகொள்வதற்காக கிளம்பியுள்ளார். ஒருபுறம் உதவி கேட்டு அந்த சிறுவன் கூச்சலிட, மறுபுறம் மகனை காப்பாற்றுவதற்காக அந்த தாயும் பின் தொடர்ந்து ஓடியுள்ளார்.

ஆற்றை நெருங்கியதும், ஜோஷாவா சிறுவனுடன் சேர்ந்து ஆற்றில் குதித்துள்ளார். அவர்களை தொடர்ந்து மகனை காப்பாற்றுவதற்காக அமண்டாவும் ஆற்றில் குதித்திருக்கிறார்.

இதற்கிடையில் அந்த வழியாக காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் சத்தம் கேட்டு, தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அவரும் ஆற்றில் குதித்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

அமண்டாவையும், அவருடைய மகனையும் பத்திரமாக வெளியில் மீட்டார். இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேகமாக, தாய்- மகன் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அமண்டா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மகன் மட்டும் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த நிலையில் நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின் இன்று மதியம் ஆற்றிலிருந்து ஜோஷாவாவின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன்- மனைவிக்கு இடையில் என்ன நடந்து? ஜோஷாவா எதற்காக குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்