கல்லூரி படிப்பை தொடர இயலாமல் தவித்த கனேடிய இளம்பெண்: திகைக்க வைத்த எதிர்பாராத உதவி!

Report Print Balamanuvelan in கனடா

கனேடிய இளம்பெண் ஒருவர் குடும்பச் சூழல் காரணமாக கல்லூரி படிப்புக்கு பணம் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து தனது நிலையை ஒன்லைனில் விளக்கி உதவி கோரியிருந்தார்.

ஒன்ராறியோவைச் சேர்ந்த ஆயிஷா குர்ரம் (20) பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு நிதி நிர்வாகம் பயிலும் மாணவி.

ஆயிஷாவின் தாயார் நீண்டகாலமாக சிறுநீரகக்கோளாறால் பாதிகப்பட்டுள்ளது வேறு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்த நேரத்தில், இனி எப்படி படிப்பைத் தொடர்வது என திகைத்துப் போயிருந்தார் அவர்.

அப்போது, ஒன்லைனில் உதவி கோரலாம், யாராவது உதவினால், அதை வைத்து படிப்பை தொடர முயற்சி செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார் ஆயிஷா.

எனவே தனது நிலைமையை விளக்கி ஒன்லைனில் உதவி கோரினார் அவர். சில மணி நேரம் ஆகியிருக்கும், ஆயிஷாவின் தொலைபேசியில் அவருக்கு ஒரு அறிவிப்பு வந்தது.

அதை எடுத்துப் பார்த்த ஆயிஷாவால் அதை நம்ப முடியவில்லை. காரணம், பிரபல அமெரிக்க பொப்பிசைப் பாடகரான டெய்லர் ஸ்விஃப்ட் ஆயிஷாவுக்கு 6,386.47 டொலர்கள் அனுப்பியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் டெய்லர் ஆயிஷாவுக்கு ஒரு செய்தியும் அனுப்பியிருந்தார். அதில் ‘Ayesha, get your learn on, girl! I love you, Taylor!’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மகிழ்ச்சியில் கதறிக் கண்ணீர் விட்டார் ஆயிஷா.

இனி எனது படிப்பைத் தொடர்வதில் எனக்கு கஷ்டம் ஒன்றும் இல்லை என்று கூறும் ஆயிஷாவுக்கு, டெய்லர் ஸ்விஃப்ட் தனக்கு பண உதவி செய்ததை நம்ப முடியவில்லை. ஒன்லைனில் ஆயிஷா பதிவிடும் இடுகைகளை டெய்லர் விரும்புவது இயல்பானதாம்.

ஒரு முறை தன்னை சந்திக்குமாறு டெய்லர் அழைப்பு விடுக்க, அவரது நிகழ்ச்சி ஒன்றின்போது, டெய்லரை சந்தித்துள்ளார் ஆயிஷா.

என்றாலும், தன்னை நினைவு வைத்து அவ்வளவு பெரிய பிரபலம் தனக்கு உதவி செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்கிறார் ஆயிஷா.

ஆனால் டெய்லர் தனது ரசிகர்களுக்கு கல்வி கற்க உதவுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Rebekah Bortniker என்ற மாணவிக்கு, அவர் தனது கல்விக் கடனை திரும்பச் செலுத்துவதற்காக 1,989 டொலர்கள் அனுப்பியிருந்தார் டெய்லர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்