தம்பியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை: சொந்தங்களை இழந்த இந்திய வம்சாவளி பெண்ணின் இன்றைய நிலை!

Report Print Balamanuvelan in கனடா

ஒரே நாளில் அன்பு தம்பியை இழந்து, தந்தையின் அன்பையும் தூக்கியெறிந்த இந்திய வம்சாவளியினரான ஒரு பெண், ஒரு நாள் எடுத்த முடிவால் இன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

1970களில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த நீனாவின் குடும்பம், ரொரன்ரோவில் வாழ்ந்து வந்தது.

வெளி உலகுக்கு மகிழ்ச்சியாக வாழ்வதுபோல் தெரிந்தாலும் வீட்டுக்குள் கணவனுக்கும் மனைவிக்கும் ஓயாத பிரச்சினை.

22 ஆண்டு கால போராட்ட வாழ்க்கைக்கு பிறகு, துணிந்து கையெழுத்திட்ட விவாகரத்து பேப்பர்களை, கணவனிடம் கொடுத்தார் நீனாவின் தாய்.

இருவரும் பிரிந்தாலும், மனைவியுடன் வாழ்ந்து வந்த பிள்ளைகளை பார்ப்பதற்காக, தினமும் அவர்கள் வீட்டுக்கு வந்துவிடுவார் நீனாவின் தந்தை.

சேர்ந்து வாழ்ந்தபோது செய்யாத வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, எப்போதும் பயமுறுத்தியே வைத்திருந்த மனைவியிடம் மீண்டும் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் கெஞ்சுவதைப் பார்ப்பதற்கு நீனாவுக்கும் அவள் தம்பி விஜய்க்கும் ஆச்சரியமாக இருந்திருக்கிறது.

ஒருநாள், அலுவலகம் சென்றிருந்த நீனாவின் தாய் சீக்கிரமாகவே வீடு திரும்ப, இருவருமாக கண் மருத்துவரைக் காண புறப்பட்டிருக்கிறார்கள்.

அப்போது நீனாவின் தம்பி விஜய், நானும் வரட்டுமா என்று கேட்க, அன்று விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்த அவர்களது தந்தை குறுக்கிட்டு, இல்லை நான் உன்னை கடைக்கு அழைத்துச் சென்று ஜீன்ஸ் வாங்கி தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அம்மாவும் மகளும் புறப்பட்டு வெளியே செல்லும்போது மாடியிலிருந்து அழைத்த விஜய், அம்மா நான் இரண்டு ஜோடி ஜீன்ஸ் வாங்கிக் கொள்ளட்டுமா என்று கேட்டிருக்கிறான்.

எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக்கொள் விஜய், என்று அம்மா கூற, அதுதான் அவர்கள் இருவரும் விஜயை கடைசியாக பார்த்தது.

மருத்துவரை பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது, தங்கள் வீடு தீப்பற்றி எரிந்த நிலையில் இருப்பதையும், தீயணைப்பு வீரர்களும், பொலிசாரும் வீட்டின்முன் கூட்டமாக நிற்பதையும் கண்டு திடுக்கிட்ட நீனாவும் அவர் தாயும் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டபோது கண்ட காட்சி அப்படியே இருவர் மனங்களிலும் அழியா ஒரு கொடூர காட்சியாய் பதிந்து விட்டது.

வீட்டுக்குள் நீனாவின் தம்பியும் அவரது தந்தையும் இறந்து கிடந்திருக்கின்றனர்.

தம்பியின் அருகே கிடந்த கத்தியையும் அவன் கழுத்திலிருந்த வெட்டுக் காயத்தையும் பார்த்தபின், அவனை அவன் தந்தை கத்தியால் கழுத்தறுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டைக் கொளுத்தியது தெரியவந்தது.

அந்த கொடூர செயல்களை, தங்கள் தந்தை நீண்ட காலமாக திட்டமிட்டு செய்ததை அறிந்ததுடன், தான் தன் தாயுடன் மருத்துவரைக் காண செல்லாமல் இருந்திருந்தால், தானும் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்ததும் அந்த அதிர்ச்சியை நீனாவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை...

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னும்... 2014இல் மோசமான நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு நீனாவின் தாயும் இறந்துவிட அடிமேல் அடி நீனாவுக்கு... கடுமையான மன அழுத்தத்தாலும், பயங்கர நினைவுகளாலும் போராட்ட வாழ்க்கை மேற்கொண்டு வந்த நீனா, 2015ஆம் ஆண்டு ஒரு கட்டுரையை வாசித்தார்.

அந்த கட்டுரையில் தனது தந்தையை மன்னித்த ஒரு பெண்ணைக் குறித்து வாசித்தார் நீனா.

அந்த பெண், நீங்கள் செய்ததை நான் மன்னிக்கவில்லை, எனது நலனுக்காக நான் உங்களை மன்னிக்கிறேன் என்று எழுதியிருந்தார். அந்த கட்டுரை நீனாவின் எண்ணங்களை நேரடியாக சென்று தாக்கியது.

20 வருடங்களாக சுமந்து வந்த கோபமும் வெறுப்பும் மாறி, ஒருவேளை தனது தந்தைக்கு ஏதேனும் பிரச்சினை இருந்திருக்கலாமோ, மன அழுத்தத்தால் பதிக்கப்பட்டிருந்திருப்பாரோ என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித்தார் நீனா.

அப்படி எண்ண எண்ண அவரது மனம் லேசானது போல் இருந்தது. ஒரு கட்டத்தில் அவரது மனப் போராட்டங்கள் காணாமல் போயிருந்தன.

இன்று தன்னைப்போல் போராடுபவர்களுக்கு உதவும் அளவுக்கு முன்னேறி விட்டார் நீனா. பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கிவருகிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்