ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொலை: பொலிசார் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் தனது குடும்பம் முழுவதையும் இளைஞர் ஒருவர் கொலை செய்த நிலையில், பொலிசார் விரைந்து வந்திருந்தால் அவரது தந்தையை மட்டுமாவது காப்பாற்றியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன் Menhaz Zaman என்னும் அந்த இளைஞர் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டை குழுவாக விளையாடுவதுண்டு எனவும், அந்த விளையாட்டின் தாக்கத்தால் கூட அவர் அந்த கொலைகளை செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், உண்மை வேறு விதமாக இருந்திருக்கிறது.

அதாவது அந்த விளையாட்டை விளையாடும் அவரது நண்பர்கள் பொலிசாருக்கு தகவலளித்ததோடு, அவர் மேலும் யாரையாவது கொலை செய்யாமல் தடுப்பதற்காக, தொடர்ந்து அவருடன் உரையாடிக் கொண்டே இருந்ததும் தெரியவந்துள்ளது.

ஆனால் பொலிசார்தான் நேரத்திற்கு வராமல், புகார்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையும் வெளியாகியுள்ளது.

Menhaz Zamanஉடன் விளையாடும் நண்பர்கள் பலர் பொலிசாருக்கு தகவலளித்தபோதும், பொலிசார் மறுநாள் மதியம் வரை அந்த வீட்டிற்கு செல்லாமலே இருந்திருக்கிறார்கள்.

சுமார் 15 மணி நேரத்திற்கு பொலிசார் Menhaz Zamanஇன் வீட்டிற்கு செல்லவில்லை என்கிறார் பெயர் வெளியிடாத ஒரு நண்பர்.

அந்த 15 மணி நேரத்தில் Menhaz Zaman எத்தனை பேரை வேண்டுமானாலும் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.

தனது தாய், தங்கை, பாட்டி ஆகியோரை கொலை செய்த Menhaz Zaman, தனது நண்பர்களிடம், என் தந்தை வீட்டுக்கு வருவதற்காக காத்திருக்கிறேன் என்று செய்தி அனுப்பியிருக்கிறார்.

அவர் செய்தி அனுப்பிய நேரத்தில், அவரது தந்தையை Menhaz Zaman கொன்றிருக்கவில்லை என்றும், நாங்கள் கொடுத்த தகவலை பொலிசார் சீரியஸாக எடுத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்றிருப்பார்களென்றால், நிச்சயம் அவரது தந்தையையாவது காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார் அவர்.

சென்று வருகிறேன் என Menhaz Zaman செய்தி அனுப்பியபோது, சில நண்பர்கள் அவரை அங்கிருந்து செல்ல விடாமல் தடுப்பதற்காக, அவருடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

அப்படி Menhaz Zamanஉடன் உரையாடிக் கொண்டே இருந்த ஒரு நண்பர், ஏராளமானோரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார் என்றே கூறலாம் என்கிறார் அந்த நண்பர்.

அந்த விளையாட்டை விளையாடும் உலகின் பல பாகங்களிலுள்ளவர்கள், தொடர்ந்து உதவ முயற்சி செய்தோம், அவரது குடும்பத்தாரையோ உள்ளூர் பொலிசாரையோ தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டே இருந்தோம் என்கிறார் அவர். சொல்லப்போனால், அன்று இரவு முழுவதும் நாங்கள் யாருமே தூங்கவில்லை என்கிறார் அவர்.

குற்றம் நடந்த அதே இரவு, Menhaz Zaman தனது முன்னாள் காதலியை பார்க்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

எங்கே அவர் வீட்டை விட்டுப்போய் அந்த பெண்ணை கொன்று விடுவாரோ என்று மிகவும் பயந்து கொண்டே இருந்தோம் என்கிறார் அவர். இது குறித்து விசாரித்தபோது பொலிசார் பதிலளிக்கவில்லை!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்