காலம் காலமாக கருப்பு நிற தோல் கொண்டவர்களை குறிவைக்கும் அந்த வாக்கியம்: ஒரு இந்திய வம்சாவளியினரின் ஆதங்கம்!

Report Print Balamanuvelan in கனடா

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி கூறிய ஒரு வாக்கியம், உலகம் முழுவதும் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியானது...

’உன் நாட்டுக்குத் திரும்பிப் போ’ என்பதுதான் அது! கருப்பு நிற தோல் உடையவர்களை, அவர்கள் ஆப்பிரிக்கர்களாக இருக்கட்டும், ஆசியர்களாக இருக்கட்டும் அவமதிப்பதற்காக வெள்ளை இனத்தவர்கள் பயன்படுத்தும் ஒரு வாக்கியம் இது.

இப்போது ஒரு நாட்டு ஜனாதிபதியே அதை பிரயோகித்துள்ள நிலையில், அதுவும், தன் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதே அதை பிரயோகம் செய்துள்ளது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதோடு, உலகம் முழுவதிலும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

எத்தனையோ நாடுகளின் வளர்ச்சிக்கு, ஆசியாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் சென்றவர்கள், ஏன் அகதிகளாக சென்றவர்கள் கூட தங்கள் பங்களிப்பைச் செய்துள்ள நிலையில், இன்னும் செய்து வரும் நிலையில், இன்னும் எத்தனையோ நாடுகள், தங்கள் நாட்டில் skilled workers இல்லாததால் அகதிகளின் உதவியை எதிர்நோக்கியுள்ள நிலைமையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த கல்லை எறிந்துள்ளார்.

அது அவருக்கு தேர்தல் வெற்றி என்னும் கனியைக் கொண்டு வருமா அல்லது தோல்வி என்னும் கல்லையே அவரது தலையில் போடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது அமெரிக்காவில் என்றில்லை, அண்டை நாடான கனடாவிலும் இருக்கிறது என்கிறார் இந்திய வம்சவளியினரான Piya Chattopadhyay.

பிரபல கனேடிய ஊடகவியலாளரான Piya, தான் கனடாவில் பிறந்திருந்தும் பல முறை அந்த வாக்கியத்தைக் கேட்டுக் கேட்டு கோபமும் வேதனையும் அடைந்ததாக தெரிவிக்கிறார். அந்த வாசகத்தைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப்போய்விட்டேன் என்கிறார் Piya.

முதன்முறை, எட்டு வயதாக இருக்கும்போது தனது தோழி ஒருத்தியுடன் செல்லும்போது, வேகமாக சென்ற கார் ஒன்று சட்டென அவர் அருகே நிற்க, அதிலிருந்த ஒருவர் ‘நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே திரும்பிப் போ’ என்று கத்தியிருக்கிறார்.

இந்த எட்டு வயது பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை, என்னையா அவர் அப்படிச் சொன்னார், நான் இங்குதான் Saskatoonஇல் பிறந்தேன் என ரொம்பவே குழம்பிப் போனார் Piya.

பின்னர் தனது 20களில் ஒரு அழகிய இளம்பெண்ணாக இருக்கும்போது, டொராண்டோவில் ஜர்னலிசம் படிக்கச் சென்றிருக்கிறார் Piya.

அப்போது ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது, அவர் பின்னால் நின்ற ஒரு நபர் அவரிடம், கயானா, ட்ரினிடாட், பாகிஸ்தான்? என்று அடுக்கிக் கொண்டே செல்ல, மன்னிக்க வேண்டும் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்க, அவர் உடனே நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்று கேட்டிருக்கிறார்.

சட்டென Piya அமைதியாக, அந்த நபர், ‘நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே திரும்பிப் போ’ என்று கத்தியிருக்கிறார்.

நான் Saskatoonஇல்தான் இருக்கிறேன் என்று கூறிவிட்டு திரும்பிக் கொண்டிருக்கிறார் Piya.

இது அத்துடன் முடியவில்லை, மீண்டும் மீண்டும் நடந்திருக்கிறது.

அதை மறக்க முயல்கிறேன் என்கிறார் Piya, ஆனால் யாரவது அதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள், சமீபத்தில் புண்ணியவான் டிரம்ப் அதையே செய்து மீண்டும் ஒருமுறை கருப்பு நிற தோல் உள்ளவர்களை குத்திக் காயப்படுத்தியிருக்கிறார்...

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்