இலங்கை தமிழர்களுடன் தோளோடு தோள் நிற்போம்: Brampton மேயர்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் Brampton மேயரான Patrick Brown, எப்போதுமே இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க தயங்காதவர்.

எதிர்ப்புகள் வந்தாலும் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நடந்தது உண்மைதான் என அஞ்சாமல் சொல்லும் தைரியம் உடையவர்.

சமீபத்தில் மே 18ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக அவர் அறிவித்தபோது Bramptonஇல் வசிக்கும் சிங்களர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இலங்கைத் தமிழர்களோடு Brampton நகரம் தோளோடு தோள் நிற்கும் என காட்டுவதற்காகவே, மே 18ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் Sri Lanka Canadian Action Coalition (SLCAC) என்னும் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிங்களர்கள் city hall முன்பு திரண்டு அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழும் நகரின் இலங்கை சமூகத்தினரிடையே, Brown பிளவை ஏற்படுத்த முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டியதோடு, அவர் இறையாண்மை கொண்ட ஒரு தேசத்தின் விவகாரங்கள் மற்றும் அரசியலில் தலையிட முயல்வதாக SLCAC நம்புவதாகவும் தெரிவித்தார்கள்.

மேயர் Brownஐ சந்திக்க தாங்கள் பல முறை விண்ணப்பித்தும் தங்கள் கோரிக்கையை அவர் நிராகரித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

ஆனால், மே 21க்கு முன் SLCAC குறித்த தினத்தில் அத்தனை பேருக்கு தனது அலுவலகத்தில் இடமளிக்க முடியாமல் போய்விட்டதாக Brown தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் SLCACஇன் குற்றச்சாட்டுகளையோ எதிர்ப்பையோ இனிய முகத்துடன் வரவேற்கவில்லை Brown.

மாறாக மே 18ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக அறிவித்ததற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் அவர்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஒரு தேசத்திற்கு வக்காலத்து வாங்குவதற்காக சிலர் Bramptonக்கு பயணம் செய்து வந்துள்ளது வரவேற்கத்தக்கதல்ல என்று பேட்டி ஒன்றின்போது தெரிவித்த Brown, இலங்கை சமூகத்தினருக்கு என்னுடைய செய்தி என்னவென்றால், சிங்களர்கள் அமைதியை விரும்பக்கூடியவர்கள்தான், அவர்களது நாட்டின் அதிபர் இழைத்த போர்க்குற்றங்களுக்கு சிங்களர்களை யாரும் குற்றம் கூறவும் இல்லை, ஆனால் ஐக்கிய நாடுகள் சபையே இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளதே என்றார்.

2009இல் இலங்கையின் உயர் ஸ்தானிகராலயம், அங்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல நடித்ததை போல, அவர்களால் கனடாவின் வெளியுறவு விவகாரத்துறையையும் ஏமாற்ற முடியாது, ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்ற முடியாது.

இப்போது இலங்கை தமிழர் இனப்படுகொலையின் 10ஆவது ஆண்டு நினைவு நாளை நாங்கள் நினைவுகூறுவதை அவர்கள் தடுக்க முயலும்போது அவர்கள் சொல்வதை நம்பி, நாங்கள் ஏமாறப்போவதில்லை என்றார் Brown.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்