கனடாவை நோக்கி புறப்பட்ட மரண தண்டனைக் கைதி: விடுவிக்கப்பட்டார் ஆசியா பீவி!

Report Print Balamanuvelan in கனடா

மத தூஷணம் செய்ததாக பாகிஸ்தான் சிறையிலடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் ஒருவருக்கு கனடா அடைக்கலம் கொடுக்க முயற்சிகள் மேற்கொண்டதையடுத்து பாகிஸ்தானிலிருந்து கனடா புறப்பட்டார் அவர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி (53).

தண்ணீர் பிடிக்கும்போது பெண்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இஸ்லாமை தூஷித்ததாக புகாரளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் ஆசியா பீவி.

2010ஆம் ஆண்டு மத தூஷணத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகள் சிறையிலிருந்தபின் மேல் முறையீட்டை அடுத்து அவர் கடந்த அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டார்.

ஒரு வழியாக பிரச்சினை முடிந்தது, நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கும்போது, தாலிபான் ஆதரவாளர்கள் ஆசியா பீவியின் விடுதலையை எதிர்த்து போராட்டங்களில் இறங்கினார்கள்.

மேற்கத்திய நாடுகளிடம் புகலிடம் கோரினார் ஆசியா பீவி. பிரித்தானியா கைவிட்ட நிலையில் கனடா உதவிக்கரம் நீட்டியது.

ஆசியா பீவியின் மகள்கள் இருவரும் பாதுகாப்பாக கனடாவை அடைந்தனர்.

இதற்கிடையில் ஆசியா பீவிக்கு கொலை மிரட்டல்கள் அதிகரித்ததையடுத்து அரசு அவருக்கு பாதுகாப்பளித்ததோடு, அவரது வழக்கு மீளாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

இந்நிலையில் மூன்று நீதிபதிகள் ஆசியா பீவியின் விடுதலைக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடைகள் நீங்கியது.

ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் ஆசியா பீவியை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தது.

அவரை வெளியே விட்டால், அவர் பாகிஸ்தானை அவமதிக்கும் விதமாக பேச வாய்ப்புள்ளதாக கூறி ராணுவம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் இது ரமலான் மாதம் என்பதால் இம்ரான் கான் ஆசியா பீவியை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்துள்ளார்.

ரமலான் மாதம் சமாதானத்திற்கான மாதம் என்பதால் இப்போது ஆசியா பீவியை விடுவித்தால் எதிர்ப்பு அதிகம் இருக்காது என்பதால் அவரை விடுவிக்க இம்ரான் கான் முடிவு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனவே ஆசியா பீவியும் அவரது கணவரும் தங்கள் மகள்களுடன் சேருவதற்காக கனடா புறப்பட்டு விட்டதாக கடைசியாக வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்