இலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல முடியாது? தூதரகம் அளித்த விளக்கம்

Report Print Deepthi Deepthi in கனடா

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் எவ்வித விசாவுமின்றி கனடா வரலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அந்த செய்திக்கு விளக்கம் அளித்து கனடாவின் தூதரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையர்கள் விசா இல்லாமல் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவு என்ற தலைப்புடன் கூடிய செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக தளங்களில் அதிகம் பரப்பப்பட்டு வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கனடாவிற்கு வரும் இலங்கையர்களுக்கு அங்கு பணி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்ற செய்திகளிலும் வெளியானது.

இந்நிலையில் இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான கனடாவின் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.

"இலங்கையர்களுக்கு கனடாவுக்கு "விசா அற்ற" அனுமதி என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. விசா நடைமுறைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை" என்று அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்