ஐரோப்பாவுக்கு பயணிக்கவிருக்கும் கனேடியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: சில முக்கிய தகவல்கள்!

Report Print Balamanuvelan in கனடா

ஐரோப்பா செல்லும் கனேடியர்கள் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டுமானால், இனி சில விசேஷித்த படிவங்களை கூடுதலாக நிரப்ப வேண்டியதோடு ஒரு சிறு கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த புதிய கட்டுப்பாடுகள் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் அமுலுக்கு வருகின்றன.

சட்ட விரோத புலம்பெயர்தலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், எல்லையை பாதுகாப்பதற்காகவும், கனேடியர்கள் உட்பட சர்வதேச பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய பயண தகவல் மற்றும் அங்கீகரிக்கும் அமைப்பு (ETIAS) என்று அழைக்கப்படும் அந்த புதிய திட்டத்தின்படி, கனேடியர்கள் ஆன்லைனில் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும், கட்டணம் ஒன்றைச் செலுத்திவிட்டு அது அங்கீகரிக்கப்படும்வரை காத்திருக்க வேண்டும்.

ஷெங்கன் மண்டலம் (Schengen Zone) என்று அழைக்கப்படும் ஐரோப்பாவிலுள்ள 26 நாடுகளுக்கு பயணிப்பதற்குதான் இந்த கட்டுப்பாடுகள்.

இந்த பட்டியலில் பிரித்தானியாவும் ரஷ்யாவும் இடம்பெறவில்லை.

தற்போதைக்கு கனேடியர்கள் சுற்றுலாவுக்காக சென்று குறுகிய காலம் தங்கும்பட்சத்தில் அவர்களுக்கு விசா தேவையில்லை.

இது எப்படி வேலை செய்கிறது?

ஐரோப்பாவிற்கு பயணிப்பதற்குமுன், கனேடியர்கள் (சிறுவர்கள் உட்பட), ETIAS விண்ணப்பத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் மற்றும் செல்லுமிடம் குறித்த விவரங்கள், கல்வித்தகுதி, பணி அனுபவம் மற்றும் குடியுரிமை போன்ற தங்கள் பயணத்திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்.

இந்த தகவல்களை நிரப்பியபின் ஒரு சிறு கட்டணம் (சுமார் 10.55 கனடா டொலர்) செலுத்திவிட்டு, காத்திருந்தால், அவர்களது அங்கீகரிக்கப்பட்ட ETIAS 24 மணி நேரங்களுக்குள் இமெயில் வழியாக விண்ணப்பித்தவர்களை வந்தடையும்.

தாங்கள் முதலாவது எந்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிற்கு செல்கிறார்கள் என்ற தகவலையும் பயணிகள் தெரிவிக்க வேண்டும், அதாவது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள அந்த நாட்டின் வழியாகத்தான் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய முடியும்.

உதாரணத்திற்கு, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு செல்வதாக விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தால், உங்கள் விண்ணப்பத்தில் நீங்கள் முதலாவது செல்லும் நாடு ஜேர்மனி என்று குறிப்பிட்டிருந்தால், நீங்கள் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியாவுக்கு செல்லும் முன், ஜேர்மனிக்குதான் செல்ல வேண்டும்.

ஜேர்மனிக்குள் நீங்கள் நுழைந்த பின்னர் ஷெங்கன் மண்டலத்திலிருக்கும் எந்த நாட்டுக்கும் 90 நாட்கள் நீங்கள் சுற்றுலா செல்லலாம்.

ஒருமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டபின் ETIAS மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். அந்த காலகட்டத்தில் நீங்கள் 26 ஐரோப்பிய நாடுகளுக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம்.

இந்த புதிய பயண கட்டுப்பாட்டுக்கான படிவங்கள் நிரப்புதல், விசா அல்ல என்றும், அது விசா தேவையற்ற அணுகுமுறைக்கான ஒரு பயணத்திற்கு முந்தைய சோதனைதான் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை அது நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?

விண்ணப்பம் அளித்த பின், பயணிகள் தங்களுக்கு தங்கள் ETIAS விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக செய்தி வந்துள்ளதா அல்லது நிராகரிக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

அப்படி உங்கள் விண்ணபம் நிராகரிக்கப்பட்டதாக செய்தி வந்தால், ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணமும் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

அந்த காரணத்தை வைத்து நீங்கள் மேல் முறையீடு செய்யலாம், அல்லது அதற்கேற்றாற்போல் உங்கள் விண்ணப்பத்தை சரி செய்து மீண்டும் முயற்சிக்கலாம்.

எதற்காக இந்த கட்டுப்பாடுகள்?

பயணக் கட்டுப்பாடுகளுக்கு காரணமே சுற்றுலாப்பயணிகளால் ஏற்படும் அபாயங்களை அடையாளம் காண்பதுதான் என்பதோடு எல்லை சோதனைகளை எளிதாக்குவதும்தான் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்