தந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமியின் உடல் தகனம்: கண்ணீருடன் விடையளித்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் சொந்த தந்தையால் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரியாவின் உடல் புதன் அன்று டொராண்டோவில் தகனம் செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் சிறுமியின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் என திரளானோர் பங்கேற்றுள்ளனர்.

டொராண்டோ நகரில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான இறுதிச் சடங்குகள் நடைபெறும் மையத்தில் வைத்து இன்று காலை உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் சிறுமி ரியாவின் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க விடையளித்துள்ளனர்.

முன்னதாக செவ்வாய் அன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பீல் பிராந்திய பொலிஸ் இடைக்கால தலைவர் கிறிஸ் மெக்கார்ட் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ரியாவின் தாயார் ப்ரியா ராம்டின் எழுதிய அறிக்கையை வாசித்துள்ளார்.

புன்னகை ஒன்றால் பலரது உள்ளங்களை கவர்ந்தவள் ரியா, இனி அவளது புன்னகையை குரலை என்னால் பார்க்கவோ கேட்கவோ முடியாது.

இனி அவளை கொஞ்சும் பாக்கியமும் எனக்கில்லை. என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை, ரியா என்னுடன் இல்லை என்பதை.

மருத்துவர் கனவுடன் வாழ்ந்தவள் ரியா, சொந்தமாக குடியிருப்பு வாங்க வேண்டும், பிராம்டன் தெருக்களில் லம்போர்கினி காரில் வலம் வரவேண்டும் என கனவு கண்டவள் என உருக்கமாக பதிவு செய்துள்ளார் ப்ரியா ராம்டின்.

கடந்த வியாழனன்று ரியாவின் 11-வது பிறந்தநாள். அன்றே அவள் சொந்த தந்தையால் படுகொலை செய்யப்பட்டாள். சுமார் 7 மணியளவில் ப்ரியாவின் தொலைபேசி அழைப்பை பதிவு செய்ததாக கூறும் பொலிசார், அதன்பின்னர் சிறுமி ரியாவின் வயதை கருத்தில் கொண்டு அம்பர் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ரியாவின் தந்தை 41 வயதாகும் ரூபேஷ் ராஜ்குமாரின் குடியிருப்பில் இருந்து சிறுமியின் உடலை கைப்பற்றிய பொலிசார்,

வெள்ளியன்று நள்ளிரவு நேரத்தில் தலைமறைவாக இருந்த ரூபேஷ் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.

அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களில் ஒருவர் ரூபேஷ் ராஜ்குமாரின் வாகனத்தை அடையாளம் கண்டு தகவல் அளித்திருந்தனர்.

தற்போது கொலை வழக்கு பதியப்பட்டுள்ள ரூபேஷ் ராஜ்குமார், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

முழுமையாக குணமான பின்னர் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்