கனடாவில் சிக்கன், வான்கோழி சாப்பிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in கனடா

சமீபத்தில் சிக்கன் நக்கெட் சாப்பிட்டவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், அது முடிவதற்குள்ளாகவே மீண்டும் கனடாவில் சிக்கன் மற்றும் வான்கோழி சாப்பிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிக்கன் மற்றும் வான்கோழி மாமிசங்களில் மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள விடயம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் சுகாதாரத்துறை, இரண்டாவது முறையாக சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி கோழி மற்றும் வான்கோழி மாமிசங்களை தாக்கியுள்ளதாகவும், சமீபத்திய தகவல்களின்படி 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் கடந்த சில வாரங்களில் மட்டும் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்தவர்கள், அங்கு 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித்தோபாவில் 10 பேரும், Saskatchewan மற்றும் ஒண்டாரியோவில் ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தோய்த்தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இம்முறை இந்த நோய்த்தொற்று கோழி மற்றும் வான்கோழி மாமிசத்தால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

கடந்த முறை சிக்கன் நக்கெட்டுகள் பிரச்சினைக்குள்ளானதால் அவற்றை தவிர்க்க முடிந்தது.

ஆனால் இம்முறை அப்படி இல்லாததால், மொத்தத்தில் கோழி மற்றும் வான்கோழிக்கறியையே தவிர்க்க வேண்டியதுதான்.

மக்களால் இந்த நோய்த்தொற்றை தவிர்க்க பெரிய அளவில் எதையும் செய்ய முடியாது என்பதால், வேகவைக்காத கோழி மற்றும் வான்கோழிக்கறியை தொடுவதற்கு முன்பும் தொட்ட பின்னரும் கைகளை சுத்தமாக கழுவுமாறு பொதுமக்களை அரசு வலியுறுத்தியுள்ளது.

அதேபோல் சமைக்கும்போதும், 74 முதல் 82 டிகிரி வெப்பநிலையில் சமைக்குமாறும், பச்சை மாமிசத்தை வெட்டுவதற்கு தனி மாமிசம் வெட்டும் பலகைகளை பயன்படுத்துமாறும், எதை எடுத்தாலும் நன்கு கழுவுமாறும் மக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்