அமெரிக்காவால் தேடப்படும் சீனப்பிரபலத்தை கைது செய்த கனடா: பிரமாண்ட சர்வதேச அரசியல் பின்னணி

Report Print Balamanuvelan in கனடா

சீன நிறுவனம் ஒன்றின் தலைமை பொருளாதார அலுவலரான பெண் ஒருவர் கனடா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கைதுக்குப் பின்னால் பிரமாண்ட சர்வதேச அரசியல் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.

Huawei Technologie என்பது சீனாவின் பன்னாட்டு தொலைக்கட்டுப்பாடு மற்றும் மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகும்.

அதன் தலைமை பொருளாதார அலுவலரான Meng Wanzhou, வான்கூவரில் கனடா பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார், அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறார்.

Meng Wanzhou, Huawei நிறுவனத்தின் தலைமை பொருளாதார அலுவலர் மட்டுமல்லாது, அதன் துணை தலைவரும், அந்நிறுவனத்தின் தலைவரான Ren Zhengfeiஇன் மகளுமாவார்.

Meng Wanzhou கைது செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் பெரிய சர்வதேச அரசியல் உள்ளது.

அதாவது, Huawei ஒரு சீன நிறுவனம், அது தனது மொபைல் போன்களில் அமெரிக்க தொழில்நுட்பத்தையும் சில மிண்ணனு பொருட்களையும் பயன்படுத்துகிறது. ஆனால் அது தனது தயாரிப்புகளை ஈரானுக்கும் வட கொரியாவுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில் அமெரிக்கா இதை விரும்பவில்லை.

மேலும் சாம்சங்கை அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த ஆப்பிள் மொபைல்களின் விற்பனையை Huawei முந்தி உலகின் இரண்டாம் இடத்திலுள்ள மொபைல் உற்பத்தியாளராக வந்துவிட்டது வேறு அமெரிக்காவின் கண்ணை உறுத்துகிறது.

Huawei தயாரிப்புகளை முடக்க அமெரிக்கா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், Huawei போன்களை அணு ஆயுதங்கள் தொடர்பான கட்டிடங்கள் அருகில் பயன்படுத்தக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டு அதை கையெழுத்திட்டதும், பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர்கள் Huawei நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்தக்கூடாது என்று அமெரிக்க நாடாளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்றியதும் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஏற்கனவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகப்போர் நடைபெற்றுவரும் நிலையில், தடைகளை மீறியதாக Meng Wanzhou கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் Meng Wanzhouவைக் கைது செய்ததற்காக அமெரிக்கா கனடாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.

ஈரானுக்கெதிரான அமெரிக்க தடைகளை மீறிய சீன நிறுவனத்தின் தலைமை பொருளாதார அலுவலரைக் கைது செய்த கனேடிய கூட்டாளிகளுக்கு அமெரிக்கர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் என்று அமெரிக்க செனேட்டர் Ben Sasse தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சீனாவுக்கான முன்னாள் தூதரான David Mulroney, இதனால் சீனாவில் வாழும் அமெரிக்க மற்றும் கனேடிய வர்த்தகத் துறையினர் பழிவாங்கப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்