காதல் வளர்க்கத்தான் விதை போட்டேன், அது காவு வாங்கும் என நினைக்கவில்லை: பிரபல இளம்பெண்ணின் கதை

Report Print Balamanuvelan in கனடா

எனக்கு காதல் துளிர்ப்பதற்கு நீண்ட காலம் ஆயிற்று. அப்போதுதான் என்னைப் போன்றே இன்னும் பலர் இருப்பார்களே என்னும் எண்ணமும் எனக்கு உண்டாயிற்று. அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

காதலைக் கண்டுபிடிக்க தடுமாறுபவர்கள், புதிய உறவு ஒன்றை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்திக் கொள்ள இயலாதவர்கள், பாலுறவுக்கு துணையை கண்டுபிடிக்க இயலாதவர்கள் போன்றோர் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காகவும், தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காகவும் ஒரு அமைப்பை ஏற்படுத்தினேன்.

ஆனால் அது இப்படி முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

நல்ல ஒரு கண்டுபிடிப்பை மோசமானவர்கள் தங்கள் தீய செயலுக்கு பயன்படுத்திக் கொண்டதுபோல் இருந்தது.


involuntary celibacy என்பதன் சுருக்க வடிவான incel என்னும் அமைப்பின் நிறுவனரான கனடாவைச் சேர்ந்த Alana என்பவரின் குற்ற உணர்வுடன் கூடிய வாக்குமூலம்தான் இது.

வெளிப்படையாக காதலை சொல்லும் அளவு கூட தைரியமில்லாமல், ஆனால் காதலிக்க வேண்டும் என்னும் ஆசையுடனேயே வாழும் ஆண்களையும் பெண்களையும், காதல் ஒன்றும் பயப்படும் விடயமல்ல, வாருங்கள் காதலில் விழலாம் என தைரியப்படுத்துவதற்காக என அவர் தொடங்கிய முயற்சிக்கு நல்ல பலன் இருந்தது.

அவரது எளிய இணையதளம் மெதுவாக பிரபலமாக தொடங்கியது.

தனிமை குறித்து ஆண்களும் பெண்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக அது மாறியது.

அதில் பெண்களின் தனித்தன்மையை விளங்கிக் கொள்ள முடியாத சில ஆண்களின், பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கோபத்தையும் காண முடிந்தது.

என்றாலும் தனிமையில் வாடும் பலருக்கும் அது ஆதரவளிக்கும் ஒரு இடமாகவே விளங்கியது.

Alanaவின் இணையதளத்தின் மூலம் சந்தித்துக் கொண்ட ஒரு ஜோடி திருமணம் கூட செய்து கொண்டார்கள்.

2000ஆம் ஆண்டு, இனி தான் இல்லாமலே தனது இணையதளம் ஒழுங்காக இயங்கும் என்ற திருப்தியுடன் இன்னொருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு விலகினார் Alana.

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகம் ஒன்றை அவர் வாசித்துக் கொண்டிருந்தபோது Elliot Rodger என்னும் மனிதனின் கதை அவரது கண்களில் பட்டது.

22 வயதுடைய அந்த நபர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் ஆறு பேரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டான்.

நீண்டகாலமாகவே தனிமையில் வாழ்ந்த அவன், இறப்பதற்குமுன் 141 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தில் தனது ஆழ் மனதில் ஆழ வேறூன்றியிருந்த பெண்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தான்.

பிரச்சினை என்னவென்றால் அந்த Elliot Rodger, இன்று incel சமுதாயத்தின் ஹீரோவாகப் பார்க்கப்படுகிறான்.

அத்துடன் இந்த பிரச்சினை முடியவில்லை, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டொராண்டோவைச் சேர்ந்த Alek Minassian என்னும் ஒருவன் சமூக ஊடகம் ஒன்றில், ’incel புரட்சி மீண்டும் தொடங்கிவிட்டது, Elliot Rodger வாழ்க’ என்ற செய்தியை வெளியிட்டிருந்தான்.

கொஞ்ச நேரத்திற்குப்பின் கூட்ட நெரிசல் மிக்க ஒரு தெருவுக்குள் வேன் ஒன்றை ஓட்டிச் சென்ற அவன், வாகனத்தால் மோதி 10 பேரைக் கொன்றுவிட்டான்.

இந்த செய்திகளைக் கேள்விப்பட்டபோது தனக்கு கவலையும் கோபமும் ஏற்பட்டது என்று கூறும் Alana, தான் அதற்காக குற்ற உணர்வு கொள்ள வேண்டுமா என தன்னையே கேட்டுக் கொண்டார்.

தேவையில்லை என்று அவருக்கு விளக்கிய அவரது நண்பர்களும் அவர் நல்ல நோக்கத்திற்காகத்தான் அந்த அமைப்பை துவக்கினார் என்பதை அவர் உணரச் செய்தார்கள்.

இதற்கிடையில் 2017ஆம் ஆண்டு incel தளம் முடிவுக்கு வந்திருந்தது.

சிறிது காலம் கவலையிலும் குற்ற உணர்விலும் வாழ்ந்த Alana, போதும், செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முடிவு செய்தார்.

தனிமையில் வாடுவோருக்காக Love Not Anger என்னும் இன்னொரு திட்டத்தை துவக்கினார்.

அது, கோபத்தில் சிக்கிக் கிடந்தது போதும், மரியாதைக்குரிய அன்பைக் கண்டு கொள்ளலாம் என்று கூறுவதற்காக, வன்முறையை தூர வைத்துவிட்டு காதலில் விழலாம் என்னும் நோக்கத்தை பறைசாற்றுவதற்காக அமைக்கப்பட்டது.

மீண்டும் இப்படி ஒரு அமைப்பை தொடங்குவேன் என்று நான் நினைக்கவில்லை என்று கூறும் Alana, தனிமையில் வாடும் பலர் இதை நல்ல விதமாக எடுத்துக் கொண்டு நேர்மறையான மாற்றங்களை நோக்கி நடைபோடுவார்கள் என நம்புகிறேன் என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்