தமிழர் அரசியல் பலத்தை அதிகரிக்க வாக்களிப்போம்: மார்க்கம் தோரண்ஹில் இடைத்தேர்தல்

Report Print Fathima Fathima in கனடா

எதிர்வரும் ஏப்ரல் 3ந் திகதி திங்கட்கிழமை மார்க்கம் தோரண்ஹில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் போட்டியிடும் ஒரே ஒரு தமிழரான ராகவன் பரஞ்சோதிக்கு ஆதரவான பிரச்சாரம் அதி தீவிரமடைந்துள்ளது.

கனடாவில் ஈழத்தமிழர்களின் அரசியல் பலம் அதிகரிக்க வைக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என பல்வேறு ஈழத்தமிழ் அமைப்புக்களும் கருதுகின்றன.

அதனால் அவை ஒன்றுபட்டு கொன்சவேடிவ் கட்சியின் ராகவன் பரஞ்சோதியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தும் வருகின்றனர்.

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசார‌ணை, நில விடுவிப்பு போன்ற பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகளை தமிழ்ச் சமூகம் அக்கறையுடன் உழைத்துவரும் இந் நேரத்தில், புலம் பெயர் நாடுகளில் ஈழத்தமிழரி்ன் அரசியல் பலம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.

அரசியல் அரங்கில் நமது பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதனால் நமது பிரச்சினைகளுக்கு அக்கறையுடனும், உறுதியுடனும் முடிவுகளை எடுத்த கொன்சவேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராகவன் பரஞ்சோதியின் வெற்றிக்காக அரசியல் பிரக்ஞை கொண்ட அமைப்புக்கள் ஓரணியில் திரள்வது புரிந்து கொள்ளக்கூடியதே.

சீக்கிய இனத்தவர் சிறுபான்மையராக இருந்தாலும் அவர்கள் ஒன்றுபட்ட சமூகமாக இயங்குவதால் கனடாவின் தேசிய அரசியல் அரங்கில் பலம் கொண்ட குழுவாக இருக்கிறார்கள்.

அரசியல் ஆதரவு அதிகளவில் தேவைப்படும் ஈழத்தமிழ் மக்கள் ஒன்றுபட்ட குழுவாக இயங்கவேண்டியதும், அரசியல் அரங்கில் தமது பிரதிநிதித்துவத்தை சாதுர்யமாக அதிகரிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

இதனால்தான் அரசியல் பலம் தேடும் ‌‌ஈழத்தமிழர் பயணத்தில் வரும் மார்க்கம் தோர்ண்ஹில் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட முனைந்த ஜொனிற்றா நாதன் என்ற தமிழ்ப் பெண்மணிக்கு போட்டியிடும் சந்தர்ப்பம் லிபரல் கட்சியால் வழங்கப்படாத நிலையில் இன்னொரு தமிழராக - ஆனால் கொன்சவேடிவ் கட்சியின் வேட்பாளராக - களமிறங்கியிருக்கும் ராகவன் பரஞ்சோதிக்கு கட்சி பேதங்களையும் கடந்து அனைத்துத் தமிழர்களும் ஒருமித்த ஆதரவை காட்டி வருகிறார்கள்.

மக்கள் மத்தியிலும் ராகவனுக்கு பலத்த ஆதரவு கிட்டி வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த வாரம் நடந்த முற்கூட்டிய வாக்களிப்பின்போது கிடைக்கப்பட்ட தகவல்களை வைத்து ஆராயும்போது தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து வாக்களித்தால் ராகவன் பரஞ்சோதிக்கே வெற்றி நிச்சயமாக கிட்டும் என்பது தெரிய வருகிறது.

கிடைத்த உத்தியோகபூர்வமற்ற தகவல்களைக் கையிலெடுத்து ஆராயும்போது சீன இனக்குழுமப் பெயரைக் கொண்டவர்கள் 27.83விகிதமான வாக்களிப்பை செய்திருப்பதும், தமிழ்ப்பெயரைக் கொண்டவர்கள் 27.08விகித வாக்களிப்பை செய்திருப்பதும் தெரிய வருகிறது.

வட இந்திய மற்றும் இசுலாமிய பெயரைக் கொண்டவர்கள் 24.85 விகிதமாகவும், வெள்ளையினத்தவராக கருதப்படக்கூடியவர்கள் 19.45 விகிதமாகவுமிருக்கின்றனர்.

இந்த விகிதாச்சாரத்தை ஆராய்ந்தால், ‌இத் தொகுதியில் 38% பெரும்பான்மையாக இருக்கும் சீன சமூகம் வாக்களித்த எண்ணிக்கைக்குச் சமனான அளவிற்கு நம் 12% தமிழர்களும் வாக்களித்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

நம் தமிழ்ச் சமூகம் மேலும் ஒற்றுமையாக இயங்கி, தமிழ்வேட்பாளரான ராகவனுக்கு தம் வாக்குக்களை அதிக அளவில் தேர்தல் தினத்தன்றும் தரும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ் வேட்பாளர் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய முடியும்.

ஆனால் தமிழ் மக்‌கள் கட்சி சார்ந்து பிரிந்து வாக்களித்தால் தமிழ் பிரதிநித்துவம் இல்லாமல் போகும். அதனால் தமிழர்களை பிரித்து வைத்துப் பார்ப்பதற்கு சில தமிழின விரோதிகள் முயல்கிறார்கள்.

பிரித்தாளும் தந்திரத்தை புரிந்து கொண்டவர்களுக்கு உதவியாக, ஒரு 'சிறுகுழு' தமிழ் வாக்காளர்களை குழப்பும் விதமான பிரச்சாரங்களை செய்து வருவதைக் காணவும் முடிகிறது.

"தமிழ் இனத்தைச் சார்ந்த ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுவிடக் கூடாது" எனக் கருதும் வேறு சிலரும் பல்வேறு முகமூடி அணிந்து நின்று, அவர்களுக்கு பக்க பலமாகவும் உற்றதுணையாகவும் இருப்பதையும் கவனிக்க முடிகிறது.

தமிழ் வாக்காளர்கள் இந்த இக்கட்டான நேரத்தில் குழப்பமடைந்துவிடாது, தமிழரான ராகவன் பரஞ்சோதிக்கு வாக்களித்து அவரை மார்க்கம் தோர்ண்ஹில் பாராளுமன்ற உறுப்பினராக்கிட வேண்டும். ‌

ராகவனின் வெற்றி ஒரு கட்சியினதோ அல்லது தனிமனிதனதோ வெற்றி அல்ல. அது "தமிழ் சமூகம் ஒன்றுபட்டதனால் ஏற்பட்ட வெற்றி" என்பதே இந்த தேர்தல் முடிவு கனடாவின் அனைத்துக் கட்சிகளுக்கும் உரத்துச் சொல்லும் செய்தியாக இருக்கும்.

அதற்கு மார்க்கம் தோ‌ர்ண்ஹில் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் தமிழ் உணர்வாளர்களாக ஒன்றுபட்டு ராகவனுக்கு வாக்களிக்க வேண்டும்.

வருகின்ற திங்கட்கிழமை ஏப்ரல் 3ம் திகதி, காலை 9:30இலிருந்து இரவு 9:30வரை வாக்களிக்க முடியும். தொகுதிக்கு வெளியே வாழும் தமிழர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள் இத் தொகுதியில் இருப்பார்களேயாயின் அவர்களை ராகவனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள்.

தமிழர்கள் அதிகமாக வாழும் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியில் ஒரு தமிழரையே பாராளுமன்ற உறுப்பினராக்கிட நம்மால் முடியும். அனைவரும் ஒன்றுபடுவோம்.

தமிழ்ப்பலத்தை நிரூபித்துக் காட்டுவோம். நாம் தோற்றுக் கொண்டிருக்கும் இனமாகத் தொடர்ந்தும் இருக்க முடியாது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments