Scarb. Rouge River தேர்தல்: தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட பிரகால் திரு வெற்றி பெறுவாரா?

Report Print Deepthi Deepthi in கனடா
Scarb. Rouge River தேர்தல்: தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட பிரகால் திரு வெற்றி பெறுவாரா?

ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்தில் ஸ்காபரோ- றூச் றிவர் தொகுதியை லிபரல் கட்சி சார்பாகப் பிரதிநித்துவப்படுத்திய பாஸ் பால்கிசூன் தனது பதவிக்காலம் முடியு முன்னர் பதவியைத் துறந்ததின் காரணமாக இந்தத் தொகுதிக்கு ஒரு இடைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.

அதற்கு முன்னோடியாக லிபரல் கட்சி வேட்பாளர்களைத் தெரிந்தெடுப்பதற்கு நியமனத் தேர்தல் எதிர்வரும் யூன் 5 இல் நடைபெற இருக்கிறது.

கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து வேட்பாளரைத் தெரிவு செய்வார்கள்.

லிபரல் கட்சியிடம் நியமனம் கேட்டு இருவர் போட்டியிடுகிறார்கள். ஒருவர் பிரகல் திரு மற்றவர் முன்னாள் புதிய சனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். இவர் இப்போது கட்சி மாறி லிபரல் கட்சியில் போட்டியிடுகிறார்.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள தொகுதிகளில் அதிகளவு தமிழ்வாக்காளர் (18விழுக்காடு) வாழும் தொகுதி ஸ்காபரோ றூச் றிவர் தொகுதியாகும்.

சென்ற ஒக்டோபர் 2015 இல் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் ஸ்காபரோ றூச் பார்க் தொகுதியில் இருந்து லிபரல் கட்சி வேட்பாளர் ஆகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கரி ஆனந்தசங்கரி என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மூன்று முக்கிய கட்சிகளும் தமதுவேட்பாளர்களாக மூன்று தமிழர்களை நிறுத்தினால் அதையிட்டு வியப்படையத் தேவையில்லை.

புதிய சனநாயக கட்சி சார்பாக சாண் நீதன் போட்டிபோட முன்வந்திருக்கிறார். இவர் ஏற்கனவே இந்தத் தொகுதியில் ரொறன்ரோ கல்வி வாரியத்துக்கு போட்டியிட்டு வென்றவர் ஆவார்.

அதற்கும் மேலாக இந்தத் தொகுதியில் ரொறன்ரோ மாநகர சபை மற்றும் மாகாண நாடாளுமன்றத்துக்கு பலமுறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் ஆவார்.

முற்போக்குப் பழமைவாதக் கட்சி தனது வேட்பாளராக ரொறன்ரோ மாநகர சபைக்குத் இந்த வட்டாரத்தில் (42) இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள றேமன் சோவை நிறுத்தக்கூடும் என்ற செய்தி அடிபடுகிறது.

தமிழர்கள் ஓரளவு பெரும்பான்மையாக வாழும் இந்தத் தொகுதிக்கு முற்போக்கு பழமைவாதக் கட்சி ஒரு தமிழரை களம் இறக்காமல் ஏன் றேமன் சோவை களம் இறக்குகிறது என்பது புரியாமல் இருக்கிறது.

லிபரல் கட்சி நியமனத் தேர்தலில் போட்டியிடும் பிரகல் திரு இதற்கு முன்னர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடா விட்டாலும் அவர் அரசியலிலும் சமூக செயற்பாட்டானாகவும் நீண்ட காலம் செயல்பட்டவர்.

தமிழ் மக்களின் கல்வி,​ பொருளாதாரம்,​ பண்பாடு போன்றவற்றில் அதிக அக்கறை கொண்ட இளைஞர் ஆவர். இவர் தனது பதினொராவது அகவையில் கனடாவுக்கு புலம் பெயர்ந்தாலும் தமிழ்மொழியில் சரளமாக மேடையில் பேசக் கூடியவர்.

பிரகலால் திரு கனடாவில் சிறப்பாக இயங்கும் கனடிய தமிழர் பேரவையின் இயக்குநர் சபையின் ஒரு உறுப்பினர் ஆவார். 2013 இல் வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் பேரவை தனது 26 ஆவது ஆண்டு மாநாட்டை கனடிய தமிழர் பேரவையின் ஆதரவோடு ரொறன்ரோவில் வெற்றிகரமாக நடத்தியது தெரிந்ததே.

பலத்த பொருட் செலவில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டின் வெற்றிக்கு பிரகல் திருவின் பங்களிப்பு மிகப்பெரியது.

மேலும் அவர் குறித்து,

 1. ஒன்ராறியோ லிபரல்கட்சியின் இணைப்புக்கான செயற்பாட்டின் பிரதித் தலைவராக செயலாற்றுகின்றார்.
 2. பல மாநகர, மாகாண, மத்திய அரசுகளின் அரசியல் பரப்புரைகட்கு ஆலோசகராக இருந்துள்ளார்.
 3. கனடாவின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றான யோர்க் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றவர். பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பொதுக் கொள்கை,​ நிர்வாகம் மற்றும் சட்டம் (PublicPolicy, Administration and Law) படித்து அதில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
 4. மாண்புமிகு எலிசபெத் மகா இராணியாரின் வைரப்பதக்கம்​,​ ஒன்ராறியோ தொண்டர் சேவை உட்பட பல தொண்டு நிறுவனங்களின் விருதுகள் பெற்றவர்.
 5. ரொறன்ரோவிலும், கமில்டனிலும் நகர உருவாக்கத்தின் அமைப்பாளர்களுக்கான தலைமைத்துவ வளர்ச்சித் திட்டத்தில் ஓராண்டு பயிற்சிக்கு (CityBuilders in the Greater Toronto area and Hamilton area) தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
 6. தனது இளவயதில் இருந்து அரசியல், சமூக, பண்பாட்டுத் துறையில் தன்னை இணைத்துக் கொண்டு பல ஆண்டுகள் பணியாற்றிய பிரகலால் திரு மாகாண நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்.
 7. நல்லவர்களையும் வல்லவர்களையும் நாடாளுமன்றம் அனுப்பினால் அது மக்களாட்சி முறை அரசியலுக்கு ஆக்கம் தரும்.

  மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

  Comments