காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தை விடுவிக்க வேண்டும்: ஐ.நா. சபை அதிரடி!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

நாடு கடத்தப்படவிருந்த இலங்கை தமிழ் குடும்ப வழக்கில் தலையிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை அவர்களை காவலில் இருந்து விடுவிக்கக் கோரியுள்ளது.

இலங்கைத் தமிழர்களான பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த கோபிகா (4) மற்றும் தருணிகா (2) ஆகியோர், கடந்த ஆகஸ்ட் மாதம் வலுக்கட்டாயமாக விமானத்தில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த நேரத்தில், கடைசி நேர நீதிமன்ற உத்தரவால் வழியிலேயே அவர்கள் பயணித்த விமானம் திருப்பிவிடப்பட்டு டார்வினில் தரையிறக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

தனித்தனியே முறையே 2012 மற்றும் 2013இல் படகு மார்க்கமாக இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா வந்திறங்கினர் பிரியாவும் நடேசலிங்கமும். அவர்கள் Biloela என்ற நகரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர்.

அப்படியிருக்கும் நிலையில் அவர்களது குடும்பம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் விமானம் வழியிலேயே திருப்பி விடப்பட்டு டார்வினுக்கு வந்து இறங்கியது.

அவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி பிரியா நடேசலிங்கம் தம்பதியரின் இளைய மகளான தருணிகா சார்பில் Optional Protocol to the International Covenant on Civil and Political Rights என்னும் திட்டத்தின் கீழ், மனித உரிமைகள் கமிட்டிக்கு ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

பொதுவாக, தருணிகா அவுஸ்திரேலியாவில் பிறந்தாலும், அவளது பெற்றோர் படகில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்தவர்கள் என்பதால் அவளுக்கும் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு மறுக்கப்படலாம்.

ஆனால் தற்போது ஃபெடரல் நீதிமன்றத்தில் ஒரு புது வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, 2017இல் படகில் வருவோர் மீதான தடையை அரசு நீக்கியிருந்ததால், தருணிகா பாதுகாப்பு விசா ஒன்றிற்கு விண்ணப்பிக்க உரிமை உள்ளது என்பதுதான் அது.

ஆக, தருணிகாவின் விசா விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதால், வழக்கு முடியும் வரை, தருணிகாவையும் அவளது குடும்பத்தையும் நாட்டை விட்டு வெளியேற்ற அரசுக்கு உரிமையில்லை என்று பொருளாகிறது.

தற்போது பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களது பிள்ளைகள் ஆகியோர், கிறிஸ்துமஸ் தீவில் தனிமைக் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சமுதாயத்திற்குள் விடுவிக்கப்படவேண்டும் (community detention) என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அதாவது தனிமையில் ஒரு தீவில் இருக்கும் குடும்பம், சமுதாயத்துடன் இணைந்து வாழ அனுமதிக்கப்படவேண்டும் என்பது அதன் பொருளாகும்.

அல்லது 30 நாட்களுக்குள் அவர்களை காவலிலிருந்து விடுவிக்க ஒரு மாற்று வழியை புலம்பெயர்தல் துறை கண்டுபிடிக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அவுஸ்திரேலிய அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக குடும்பத்தின் சட்டத்தரணியான Carina Ford தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்