கடலில் கிடைத்த பாட்டிலில் இருந்த கடிதத்தை எழுதியவர் கிடைத்து விட்டார்: ஆனால்...

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய சிறுவன் ஒருவன் மீன் பிடிக்கச் சென்றபோது கிடைத்த பாட்டிலில் இருந்த கடிதத்தின் சொந்தக்காரர் கிடைத்து விட்டார், ஆனால் கடிதம் கிடைத்த விடயம் அவருக்கு தெரியாது!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Jyah Elliott (13) தனது தந்தையுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, கடலில் மிதந்து வந்த ஒரு பாட்டிலுக்குள் கடிதம் ஒன்று இருப்பதைக் கண்டெடுத்தான்.

50 ஆண்டுகளுக்குமுன் Paul Gilmore என்பவர், அப்போது அவருக்கு 13 வயது, அந்தகடிதத்தை எழுதியிருந்தார்.

அவர் பிரித்தானியாவிலுள்ள Southhamptonஇலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு தனது குடும்பத்துடன் TSS Fairstar என்ற கப்பலில் பயணிக்கும்போது, இந்த கடிதத்தை எழுதி பாட்டிலுக்குள் வைத்து, அந்த பாட்டிலை இந்தியப் பெருங்கடலுக்குள் வீசியிருக்கிறார்.

குட்டிப் பையனாக இருந்த Mr Gilmore, ஒரு பேனா நண்பன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு கடிதத்தை எழுதி பதில் கடிதம் எழுத வேண்டிய முகவரியையும் எழுதியுள்ளார்.

தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கடிதம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Jyah Elliott கையில் கிடைத்திருக்கிறது.

கடிதம் கிடைத்ததும், Jyah அந்த கடிதத்துக்கு பதில் எழுதி, அதில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், அந்த கடிதத்துக்கு பதில் எதுவும் கிடைக்காமல் போகவே, Jyahஇன் தாய், பேஸ்புக் மற்றும் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உதவியுடன் கடிதத்தை எழுதிய Paul Gilmoreஐ உலகம் முழுவதும் தேடத் துவங்கியிருக்கிறார்.

நடந்தது என்னவென்றால், அவுஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, Paul Gilmoreஇன் குடும்பம் மீண்டும் இங்கிலாந்துக்கே திரும்பியிருக்கிறது.

அந்த தொலைக்காட்சி நிறுவனம் Paul Gilmoreஇன் உறவினர்கள் மூலம் அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டது.

Paul Gilmoreஉடன் அதே கப்பலில் பயணித்தவரான அவரது சகோதரியான Annie Crossland என்பவரைக் கண்டுபிடித்து, நடந்தவற்றை விளக்கியுள்ளது அந்த தொலைக்காட்சி நிறுவனம்.

ஆனால் Paul Gilmore தற்போது இங்கிலாந்தில் இல்லை, அதாவது அவர் ஒரு கப்பலில் Baltic பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் வீடு திரும்பியதும் Jyahவுக்கு நிச்சயம் Gilmoreஇடமிருந்து ஒரு பதில் வரும் என உறுதியளித்துள்ளார்கள் அவரது உறவினர்கள்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...