தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ஐ.எஸ். ஆதரவு மாணவிக்கு 42 ஆண்டுகள் சிறை!

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தமிழரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற ஐ.எஸ் ஆதரவு வங்கதேசப் பெண்ணுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்த 26 வயதான முமேனா ஷோமா என்ற பெண், கடந்த 2013 ஆம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பரப்புரைகளால் கவரப்பட்டு, அவர்களது ஆதரவாளராக மாறியுள்ளார்.

தொடர்ந்து, துருக்கி வழியாக சிரியாவிலுள்ள ஐ.எஸ். பகுதிக்குச் செல்லும் நோக்குடன், அந்த நாட்டில் கல்வி பயில்வதற்கான விசாவுக்கு முமேனா ஷோமா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரது விண்ணப்பத்தை துருக்கி அரசு நிராகரித்தது.

அதையடுத்து, மேலை நாடுகளில் தாக்குதல் நடத்துமாறு ஐ.எஸ். பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக, அவர் அவுஸ்திரேலியாவில் கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்.

அவரது விசாவை ஏற்ற அவுஸ்திரேலிய அரசு, அவுஸ்திரேலிய குடும்பம் ஒன்றுடன் தங்கிப் படிக்க கடந்த 2018 ல் முமேனாவுக்கு அனுமதி அளித்தது.

இதனிடையே ஐ.எஸ். உத்தரவுபடி அந்தக் குடும்பத்தினரை படுகொலை செய்ய திட்டமிட்ட முமேனா, அந்த வீட்டிலிருந்த தலையணையை கத்தியால் குத்தி அதற்காக ஒத்திகை பார்த்துள்ளார்.

இச்சம்பவத்தை கவனித்த அவுஸ்திரேலிய குடும்பத்தினர், அவரை வேறு வீட்டுக்கு மாற்றும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, மலேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய ரோஜர் சிங்காரவேலு என்ற தமிழர் வீட்டில் அவர் தங்க வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஐ.எஸ் அமைப்பு தங்களின் அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியிட்ட காணொளிகளை பார்வையிட்ட ஷோமா, அடுத்த மூன்று நாட்களில் சிங்காரவேலுவை திட்டமிட்டு கத்தியால் தாக்கியுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் இருந்து சிங்காரவேலு உயிர்பிழைத்தார். ஷோமாவின் தாக்குதலில் இருந்து தாம் உயிர் தப்பியது வியப்பாக உள்ளது என கூறியுள்ள சிங்காரவேலு,

இதுபோன்ற நபர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு எப்படி விசா அனுமதி வழங்குகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகராம் தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு 42 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மட்டுமின்றி 31 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஷோமாவுக்கு பிணை நிராகரிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்