குருபெயர்ச்சி 2018 - 2019: விருச்சிக ராசியினரே உங்களுக்கு நன்மைகள் கிடைக்குமா?

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

அன்பார்ந்த விருச்சிக ராசி நேயர்களே!

விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். தன்மானம் அதிகமுள்ள நீங்கள் தயவு, தாட்சண்யம் அதிகம் பார்ப்பவர்கள். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகள், ஏமாற்றங்கள், தூக்கமின்மையை தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும்.

ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள். அவசரப்பட்டு வாக்குறுதி தந்து அதை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள்.

ஜென்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரிடமாவது சண்டைபோட வேண்டுமென நினைப்பீர்கள். உங்களைப்பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள்.

சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.

வங்கியில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.

குருபகவானின் பார்வை பலன்கள்

குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டைபார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். சிலர் தங்களது பங்கை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவீர்கள். தியானம், பொது சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் தன, பூர்வபுண்யாதிபதியான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக் கட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் சேவகாதிபதியும், சுகாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமையால் பதட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் முடியாமல் போனாலும் எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். வீட்டில் கழிவு நீர் குழாய், குடி நீர் குழாய் பழுதாக வாய்ப்பிருக்கிறது.

தாயாருக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம் வரக்கூடும். அவருடன் ஆரோக்யமான விவாதங்களும் வந்து போகும். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அநாவசிய செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.

வாகனம் வாங்குவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை அஷ்டமாதிபதியும், லாபாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.

பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல், மறைமுக நெருக்கடிகள், வாகன விபத்துகள் வந்து செல்லும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல் நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிசார வக்ரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும்.

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வி.ஐ.பி ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும்.

கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். சின்னச் சின்ன நஷ்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கத் தான் செய்யும். புது முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். யாருக்கும் முன் பணம் தந்து ஏமாற வேண்டாம்.

வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்து கொள்கிறார்கள் என்று வருத்தப்படுவீர்கள். தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.

உத்யோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். உங்களின் திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும்.

நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். முறைப்படி தேர்வெழுதி வெற்றி பெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வைப் பெற போராட வேண்டி இருக்கும்.

கன்னிப் பெண்களே!

காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மாணவ, மாணவிகளே!

டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். நொறுக்குத் தீனிகளை உண்பதைக் குறையுங்கள். அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது.

அரசியல்வாதிகளே!

சபை நாகரிகம் அறிந்து பேசுங்கள். உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள்.

கலைத்துறையினரே!

உங்களுக்கு எதிராக விமர்சனங்கள், கிசுகிசுகள் வந்தாலும் விரக்தியடையாதீர்கள். சுய விளம்பரத்தை விட்டு விடுங்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.

விவசாயிகளே!

எலித் தொல்லை அதிகமாகும். கரும்பு, தேக்கு லாபம் தரும். குறுகிய காலப் பயிர்களால் நட்டம் வரும். இந்த குரு பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தையும், கேள்விக்குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதன் மூலமாக ஓரளவு சாதிக்க வைக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்