குருபெயர்ச்சி 2018 -2019: ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

ரிஷபம் ராசியினரே

பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட நீங்கள், இதமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுப்பவர்கள். தன்கையே தனக்குதவி என்று வாழும் நீங்கள், கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வின் சிகரத்தை எட்டிப் பிடிப்பவர்கள்.

இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களை அவமானப்படுத்திய குருபகவான் பல கஷ்ட, நஷ்டங்களை தந்து, மறைமுக எதிர்ப்புகளால் உங்களை திணறடித்து, கடன் பிரச்னைகளால் தூக்கத்தைக் குறைய வைத்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும்.

வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

சிலர் வங்கிக் கடனுதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும்.

மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்களும் விலகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளின் திருமணத்தை எல்லோரும் மெச்சும் படி நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

அவருக்கும் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல பெண் அமைவார். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரீசலிக்கப்படும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வெளிமாநில புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள்.

அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரங்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கோயில் பஜனைகளில் கலந்து கொள்வீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் அஷ்டமலாபாதிபதியான குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும்.

மூத்த சகோதர வகையில் சச்சரவு வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புது பதவிகள், பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் பாக்யாதிபதியும்ஜீவனாதிபதியுமான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்யம் சீராகும்.

சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் தனபூர்வபுண்ணியாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும்.

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனக்குழப்பம், பூர்வீக சொத்துப் பிரச்னை, வீண் டென்ஷன் வந்து செல்லும்.

பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கல்யாண விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மனைவி உங்களைப் புரிந்து கொள்வார். புது வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் அடுத்தடுத்து சில நஷ்டங்களை சந்தித்தீர்களே! எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! பலரிடம் ஏமாந்தீர்களே! இனி சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள்.

புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்பு தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வருவார்.

சிலர் செய்து கொண்டிருக்கும் தொழிலை விட்டு விட்டு வேற்று தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. புரோக்கரேஜ், ஏற்று மதிஇறக்குமதி, கன்ஸ்ட்ரக்ஷன், பதிப்பகம், கட்டிட உதிரி பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் ஓடி ஓடி வேலை பார்த்தும் கெட்ட பெயர்தானே கிடைத்தது! இனி முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.

அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்களில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் மனது மாறும்.

கன்னிப்பெண்களே!

நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். காதல் கைகூடும். வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும்.

மாணவ மாணவியர்களே!

எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள்.

கலைத்துறையினரே!

எதிர்பார்த்து ஏமாந்து போன வாய்ப்பு இப்போது கூடி வரும். வருமானம் உயரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.

அரசியல்வாதிகளே!

புள்ளி விவரங்களுடன் எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேசி கட்சி சகாக்களின் பாராட்டைப் பெறுவீர்கள். தொகுதி மக்களுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

விவசாயிகளே!

சூரிய காந்தி, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துகளால் ஆதாயம் உண்டு. பழைய கடன் தீரும். இந்த குரு பெயர்ச்சி பதுங்கியிருந்த உங்களை பளிச்சென முன்னேற வைப்பதுடன் காசு, பணம் சொத்து சுகத்தையும் தரும்.

பரிகாரம்

“ஓம் குரவே நமஹ” என வியாழக்கிழமைகளில் 108 முறை ஜெபிக்கலாம். ஏழை எளியவர்களுக்கு பொருளாதார உதவி செய்யவும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்