ஆவணி மாத ராசிபலன்கள்: எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம்

Report Print Kavitha in ஜோதிடம்

ஆடி மாதம் முடிவடைந்த நிலையில் இன்றோடு ஆவணி மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதம் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை தீமை என்று பார்ப்போம்.

மேஷம்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமென்று நினைப்பவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியாகிய சூரியன் இந்த மாதம் முழுக்க தன் சொந்த வீடான 5ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைகளெல்லாம் விலகும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் முடியும். மகனுக்கும் வேலை கிடைக்கும்.

பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். சிலர் பூர்வீக சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வி.ஐ.பிகளை நீங்கள் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் கொஞ்சம் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். என்றாலும் முகம் மலரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சொந்த பந்தங்களுடன் இருந்த கசப்புணர்வு நீங்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கல்யாணம், காது குத்தல், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். ஆனால் 30ம் தேதி வரை சுக்கிரன் 6ல் நிற்பதால் வாகன விபத்துகள் ஏற்படக் கூடும். கணவன் மனைவிக்குள் சண்டை, வீண்சந்தேகம் வந்து செல்லும். வாகனம் பழுதாகும். கல்யாணப் பேச்சு வார்த்தையில் முடிவு தாமதமாகும். ஆனால் 31ம் தேதி முதல் சுக்கிரன் சொந்த வீட்டில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் அது முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

திருமணம் கூடி வரும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜை மாற்றுவீர்கள். 7ம் வீட்டில் குருவும் தொடர்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சனியும் 9ல் அமர்ந்திருப்பதால் விரக்தி, வேதனை, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களே! முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். மாணவர்களே! நினைவாற்றல் கூடும். மதிப்பெண் உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள்.

பங்குதாரர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். புது பொறுப்புகளும் தேடி வரும். என்றாலும் 10ல் செவ்வாய், கேது நிற்பதால் அவ்வப்போது வேலைச்சுமை அதிகமாகும். கலைத்துறையினரே! உங்கள் புகழ், கௌரவம் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சல் அதிகரிக்கும். பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 24, 25, 26, 27 மற்றும் செப்டம்பர் 3, 4, 5, 6, 11, 12, 13.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 4.29 மணி முதல் 19, 20ம் தேதி வரை மற்றும் செப்டம்பர் 15,16ம் தேதி வரை.

ரிஷபம்

கனவு காண்பதில் வல்லவர்களான நீங்கள், அது நனவாகும் வரை கடினமாக உழைப்பவர்கள். புதன் இந்த மாதம் முழுக்க வலுவடைந்திருப்பதால் பரபரப்பாக காணப்படுவீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்துக் காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். தாயார் ஆதரவாக இருப்பார். தாயாரின் உடல் நலமும் சரியாகும்.

கடந்த ஒரு மாத காலமாக உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் முடங்கிக் கிடந்த சூரியன் இப்போது சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

பழுதான வாகனத்தை சரி செய்வீர்கள். காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு சிலர் மாறுவீர்கள். உங்களின் ராசிநாதன் சுக்கிரன் 30ம் தேதி வரை 5ல் நிற்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வாகன வசதி பெருகும் ஆனால் 31ம் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, மனைவிவழியில் கருத்து மோதல்கள் வந்து செல்லும்.

வாகனத்தில் செல்லும் போது அலைபேசியில் பேச வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். குருவும் 6ம் வீட்டிலேயே மறைந்து நிற்பதால் சின்னச் சின்ன வேலைகளையும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சந்தேக புத்தியால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சனியும் சாதகமாக இல்லாததால் நோயாளியாகிவிடுமோ என்ற ஒரு அச்சம், மனக்கவலைகள் வந்து செல்லும்.

பணப்பற்றாக்குறையும் ஏற்படும். என்றாலும் ராகு 3ல் நிற்பதால் தைரியமாக நின்று எல்லாப் பிரச்னைகளையும் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.மாணவர்களே! அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மூத்த அதிகாரிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

சிலருக்கு தேவையற்ற, விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். விவசாயிகளே! வற்றிப் போயிருந்த கிணற்றில் நீர் சுரக்கும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். அனுபவ அறிவாலும், ஆன்மிக பலத்தாலும் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 19, 20, 27, 28, 29, 30, 31 மற்றும் செப்டம்பர் 1, 6, 7, 8, 9,13, 15, 16.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 21, 22, 23ம் தேதி நண்பல் 12.57 மணி வரை.

மிதுனம்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதை விரும்பாதவர்களே! கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து உங்களை கோபப்பட வைத்த சூரியன் இப்போது 3ல் நுழைந்திருப்பதால் குழப்பங்கள், தடுமாற்றங்கள் யாவும் நீங்கும். பிரச்னைகளை பக்குவமாக அணுகி வெற்றி பெறும் வித்தையைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களை சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக செயல்படும் தைரியம் உங்களுக்குப் பிறக்கும். பழைய நகையை தந்து புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள்.

வீடு, மனை உங்கள் ரசனைக் கேற்ப அமையும். இளைய சகோதர வகையில் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். மகளுக்கும் நல்ல வாழ்க்கைத்துணை அமையும். வழக்கில் வெற்றி உண்டு. சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் சில உதவிகள் கிட்டும். பழுதான வாகனத்தை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். புதிதாக மின்னணு, மின்சார சாதனங்களும் வாங்குவீர்கள்.

என்றாலும் சனிபகவான் 7ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் இருக்கும் வீண் சந்தேகத்தை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்திலும் கவனம் செலுத்தப்பாருங்கள். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கு சாதகமாக திரும்பும். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள்.

புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். குரு 5ம் வீட்டில் வலுவாக நிற்பதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். என்றாலும் சர்ப்ப கிரகங்கள் சரியில்லாததால் வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்கள். கன்னிப் பெண்களே! காதல் கனியும். கல்யாணம் கூடி வரும். மாணவர்களே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். கெட்ட நண்பர்களை விட்டு விலகுங்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள்.

பங்குதாரர்களால் அவ்வப்போது குடைச்சல் இருந்தாலும் பிரச்னைகள் பெரிதாக இருக்காது. உத்யோகத்தில் இடமாற்றம், வேலைச்சுமை இருக்கும். மேலதிகாரி ஒத்துழைப்பு தந்தாலும் சக ஊழியர்களால் சிறுசிறு பிரச்னைகள் வந்து செல்லும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! வங்கிக் கடனுதவி கிடைக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 19, 20, 21, 22, 29, 30, 31 மற்றும் செப்டம்பர் 1, 6, 7, 8, 9, 15, 16.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 23ம் தேதி நண்பகல் 12.58 மணி முதல் 24, 25ம் தேதி வரை.

கடகம்

பெரிய திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்களே! கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களைக் கோபப்பட வைத்தார் சூரிய பகவான். குடும்பத்திலும் சண்டை, சச்சரவுகளையும், பணப்பற்றாக்குறையையும் ஏற்படுத்திய சூரியன் இப்போது உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். தனாதிபதியான சூரியன் தனஸ்தானத்திலேயே அமர்வதால் இந்த மாதம் முழுக்க பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கொடுக்கல், வாங்கல் பிரச்னைகளெல்லாம் சுமுகமாக முடியும். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் விலகும். அன்யோன்யம் அதிகரிக்கும். சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தோற்றப் பொலிவு கூடும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனப் பழுது சரியாகும். சமையலறை, படுக்கை அறையை நவீனமயமாக்குவீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும்.

ஆனால் 4ல் குரு தொடர்வதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். தாயார் கோபமாக பேசினாலும் நீங்கள் பொறுத்துப் போவது நல்லது. தாய் வழி உறவுகளுடனும் கருத்து மோதல் வரும். புதன் சாதகமாக இருப்பதால் மகிழ்ச்சி தங்கும். பழைய நண்பர், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சனிபகவான் 6ல் தொடர்வதால் உங்களுக்கு எவ்வளவு பிரச்னை வந்தாலும் ஒரு தெளிவையும், நிம்மதியையும், தைரியத்தையும் உண்டாக்கும்.

என்றாலும் ராகுவும், கேதுவும் சரியில்லாததால் வெளி உணவுகள், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதரங்களால் அலைச்சல்களும், செலவினங்களும் அதிகமாகும்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மாணவர்களே! ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பால் கணிசமாக லாபம் உயரும். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள்.

உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. நீங்கள் எதிர்பார்த்த இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகு வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். தொட்டது துலங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 18, 21, 22, 31 மற்றும் செப்டம்பர் 1, 3, 9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 26, 27, 28ம் தேதி காலை 11.05 வரை.

சிம்மம்

எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவதில் வல்லவர்களே! கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 12ல் மறைந்திருந்த உங்கள் ராசிநாதன் சூரியன் இப்போது உங்கள் ராசிக்குள் ஆட்சி பெற்று நுழைந்திருப்பதால் அலைச்சல் குறையும். வீண் செலவுகள், திடீர் பயணங்களிலிருந்து விடுபடுவீர்கள். கணவன், மனைவிக்குள் நிலவிய பனிப்போர் நீங்கும். இருவருக்குள் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.

தடைப்பட்ட அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் சந்தோஷம் நிலைக்கும். சமயோஜித புத்தியால் சாதித்துக் காட்டுவீர்கள். சவாலான தேர்வில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ராசிக்கு 5ம் வீட்டிலேயே சனிபகவான் நிற்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பூர்வீக சொத்து பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கண், காது வலி நீங்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.

சகோதரிக்கு நல்ல இடத்தில் நிச்சயமாகும். ஆனால் குரு 3ல் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். பிரபலங்களுடன் கருத்து மோதல்கள் வரும். செவ்வாய் 6ல் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சரியாகும். சகோதர வகையில் உதவிகளுண்டு.

பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். மாணவர்களே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். மேலதிகாரியை அனுசரித்துப் போவது நல்லது. சக ஊழியர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும். விவசாயிகளே! உங்கள் கடன் தள்ளுபடியாகும். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 18, 24, 25, 26, 27 மற்றும் செப்டம்பர் 3, 4, 11, 12, 13, 14, 15, 16.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 28ம் தேதி காலை 11.05 மணி முதல் 29, 30ம் தேதி இரவு 7.23 வரை.

கன்னி

சமாதானத்தை எப்போதும் விரும்புபவர்களே! உங்கள் ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க வலுவாக இருப்பதால் பணப்புழக்கம் குறையாது. எதிர்பார்த்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ராசிக்குள் 12 ம் வீட்டிலேயே சூரியன் நுழைந்திருப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தகப்பனாருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். தந்தைவழி சொத்துக்களை அடைவதில் இருந்த பிரச்னைகளும் விலகும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். சாமர்த்தியமாகவும், சாதூர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். அழகு, இளமை கூடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். என்றாலும் செவ்வாயும், கேதுவும் 5ல் நிற்பதால் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். குருபகவான் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பேச்சில் முதிர்ச்சி தெரியும். அனுபவ பூர்வமாக பேசி பல காரியம் சாதிப்பீர்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகள் நீங்கும். சனி 4ம் வீட்டில் தொடர்வதால் வாகனத்தை இயக்கும் போது கவனமாக இருங்கள். அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள்.

கன்னிப்பெண்களே! எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். ஆடை அணிகலன்கள் சேரும். மாணவர்களே! உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில்யுக்திகளை கற்றுக் கொள்வார்கள்.

வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். பிரச்னை தந்தவரை நீக்கிவிட்டு புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பல ஆலோசனைகள் தருவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விவசாயிகளே! எள், ஆமணக்கு, சூரிய காந்தி போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களால் ஆதாயம் அடைவீர்கள். நீண்டகால கனவுகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 19, 20, 22, 27, 28, 29 மற்றும் செப்டம்பர் 5, 6, 7, 8, 9, 13, 14, 15, 16.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 30ம் தேதி இரவு 7.24 மணி முதல் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி வரை.

துலாம்

மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர்களே! கடந்த ஒருமாதமாக 10ல் நின்று உத்யோகத்தில் பிரச்னைகளை தந்த சூரியன் இப்போது லாப வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்குகள் சாதகமாகும். தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதனும் சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும்.

வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பொது அறிவுத் திறன் வளரும். பதவிகள் தேடி வரும். உங்களின் ராசிநாதன் சுக்கிரன் வலுவான வீடுகளில் சஞ்சரிப்பதால் கணவன், மனைவிக்குள் இருந்து வரும் கசப்புணர்வுகள் நீங்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆடம்பரப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் வாங்குவீர்கள்.

நவீன ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாண விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் ராசிக்குள்ளேயே குருவும், நிற்பதால் மனக்குழப்பம், தடுமாற்றம் வந்து நீங்கும். யாரை நம்புவது, நம்பாமல் போவது என்ற கலக்கம் வந்து சேரும். வீண் சந்தேகங்கள் வரும்.

பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வரும். ஆனால் சனிபகவான் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் யாவையும் தைரியமாக முடித்துக் காட்டுவீர்கள். செவ்வாய் 4ம் வீட்டில் நீடிப்பதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தாய்வழி சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். என்றாலும் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியிலும் வெற்றி கிட்டும். பெற்றோரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்களே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள்.

வேலையாட்களிடம் கறாராக இருங்கள். நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வரும். கடல் உணவு, கமிஷன், மர வகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட இடர்பாடுகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் அநாவசியமாக நுழையாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். கலைத்துறையினரே! புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். விவசாயிகளே! நிலத்தகராறுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். விளைச்சல் பெருகும். பணப் புழக்கமும் கௌரவமும் கூடும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 19, 20, 21, 22, 24, 29, 30, 31 மற்றும் செப்டம்பர் 1, 7, 8, 9, 10, 11, 15, 16.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 2, 3ம் தேதி வரை.

விருச்சிகம்

பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! உங்களுடைய ராசிக்கு கடந்த ஒரு மாத காலமாக பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் பகை பெற்று சூரியன் அமர்ந்திருந்தார் அதனால் குடும்பத்தில், கணவன், மனைவிக்குள் வாக்குவாதங்களும், பிரச்னைகளும், பிரிவுகளும் வந்து போனது. இப்போது சூரியன் 10ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். தந்தையார் உங்களைப் புரிந்து கொள்வார்.

பாகப்பிரிவினையும் நல்ல விதத்தில் முடிவடையும். பூர்வீகச் சொத்தை பராமரிப்பீர்கள். புதுப்பிக்கவும் கொஞ்சம் தொகை ஒதுக்கி எல்லாக் காரியங்களையும் செய்வீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். தன்னம்பிக்கை உண்டாகும். குரு 12ம் வீட்டிலேயே தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் வந்து செல்லும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும்.

புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு உண்டு.

உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு இந்த மாதத்தில் நிச்சயமாகக் கூடும். சிலர் நல்ல வசதியான வீட்டிற்கு மாற நினைப்பீர்கள். ராசிநாதன் செவ்வாய் 3ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைகள் தீரும். வழக்கில் வெற்றி கிட்டும். என்றாலும் 2ல் சனி தொடர்வதால் பணப்பற்றாக்குறை, அலைச்சல், சின்னச் சின்ன காரியத் தடைகள், இழுபறியான சூழ்நிலைகள் அவ்வப்போது இருக்கும்.

அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களே! ஆசிரியரின் ஆதரவு கிட்டும். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணர்வர்கள் திருந்துவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள்.

ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் வரும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் இடமாற்றமும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓயும். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். பழுதான பம்புசெட்டை மாற்றுவீர்கள். பொறுமையால் பெருமையடையும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24, 31 மற்றும் செப்டம்பர் 1, 8, 9, 11, 13.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 4, 5, 6ம் தேதி காலை 7.41 மணி வரை.

தனுசு

மன்னிக்கும் குணம் அதிகமுள்ளவர்களே! கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்கு 8ல் மறைந்திருந்த உங்களுடைய பாக்யாதிபதியான சூரியன் இப்போது 9ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பணப் பற்றாக்குறை நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வழக்குகள் சாதகமாகும்.

அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்தை சரி செய்வீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சேரும். பாகப்பிரிவினை பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொந்த பந்தங்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும்.

கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். சுக்கிரன் தொடர்ந்து ஆதரவாக இருப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். கல்யாணம் கூடி வரும்.

சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். குருபகவானும் லாப வீட்டில் நீடிப்பதால் செல்வாக்குக் கூடும். சிலருக்கு பெரிய பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். புதிதாக வீடு வாங்குவீர்கள். 2ல் கேதுவும், 8ல் ராகுவும், ராசிக்குள்ளேயே சனியும் தொடர்வதால் சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கெட்ட நண்பர்களை தவிர்த்துவிடுவது நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். மாணவர்களே! கல்யாணம், திருவிழா என்று அலையாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முரண்டு பிடித்த வேலையாட்கள் திருந்தி கச்சிதமாக வேலையை முடிப்பார்கள்.

வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். என்றாலும் உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! நவீனரக விதைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப்பாருங்கள். போராட்டங்களில் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 24, 25, 26, 27 மற்றும் செப்டம்பர் 3, 4, 11, 12, 13.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 6ம் தேதி காலை 7.42 மணி முதல் 7, 8ம் தேதி காலை 10.03 மணி வரை.

மகரம்

முயற்சிகளில் பின் வாங்காதவர்களே! இந்த மாதம் முழுக்க சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புகழ், கௌரவம் கூடும். அழகு, இளமை அதிகரிக்கும். நல்லவர்கள் நண்பர்களாவார்கள். வீடு கட்டுவது சாதகமாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். நெடுநாட்களாக தள்ளிப் போன கல்யாணம் முடியும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் 8ல் நிற்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு.

அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். அண்டை வீட்டாரின் ஆதரவு பெருகும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனஇறுக்கம் நீங்கும். உங்களை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு தள்ளி நின்றார்களே! இனி வலிய வந்து பேசுவார்கள். நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையை அறிந்து கொள்வார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை முடிப்பீர்கள்.

ஆனால் குரு 10ல் நீடிப்பதால் சிலர் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் உங்களுக்கு தலைக்கனம் என்றும், முன்போல் நீங்கள் இல்லையென்றும்

பிரித்துப் பேசுவார்கள். 12ல் சனி அமர்ந்து ஏழரைச் சனியாக தொடர்வதால் நெருங்கியவர்களாக இருந்தாலும் ஜாமீன், கேரன்டர் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது மற்றும் ராசிக்குள்ளேயே கேதுவும், செவ்வாயும் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். சகோதரங்களால் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களே! முதல் மதிப்பெண் பெறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள். பெற்றோர் நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்கள்.

வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தைக் கண்டறிந்து நீக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும்.

சக ஊழியர்களுக்காக மேலதிகாரிகளிடம் பரிந்து பேசுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நிலத்தில் நீர்வசதி பெருகும். முற்பகுதி அலைச்சலைத் தந்தாலும் பிற்பகுதியில் சாதித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 17, 19, 20, 27, 28, 29, 30 மற்றும் செப்டம்பர் 1, 5, 6, 7, 13, 15, 16.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 8ம் தேதி காலை 10.03 மணி முதல் 9,10ம் தேதி பிற்பகல் 01மணி வரை.

கும்பம்

எப்பொழுதும் கலகலப்பாக சிரித்துப் பேசி அனைவரையும் சிரிக்க வைப்பவர்களே. இந்த மாதம் முழுக்க சூரியன் சாதகமாக இருப்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். ஆனால் புதன் 27ம் தேதி வரை 6ல் நிற்பதால் பழைய நண்பர்களுடன் கருத்து மோதல் வரும். உறவினர்களில் ஒருசிலர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள்.

நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்வார்கள். எனவே நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. ஆனால் புதன் 28ம் தேதி முதல் வலுவாக காணப்படுவதால் தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். தாய்வழி சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நண்பர்கள் தக்க நேரத்தில் உதவுவார்கள்.

உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் கல்யாணத் தடைகள் நீங்கும். புது வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். குருபகவான் 9ல் நிற்பதால் எத்தனைப் பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியும், எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையும் கிடைக்கும். வி.ஐ.பிகளின் ஆதரவு கிடைக்கும். சனிபகவானும் சாதகமாக இருப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் லாபம் தரும். அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். வியாபாரத்தில் அதிரடியாக முதலீடு செய்யாமல் அமைதியாக செயல்படப் பாருங்கள். லாபம் கணிசமாக உயரும்.

வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களால் தர்மசங்கடமான சூழல்களுக்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். கலைத்துறையினரே! ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். பம்பு செட் பழுதாகும். சகிப்புத்தன்மை தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 19, 20, 21, 22, 29, 30, 31 மற்றும் செப்டம்பர் 1, 6, 7, 8, 9, 15, 16.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 10ம் தேதி பிற்பகல் 01 மணி முதல் 11,12ம் தேதி மாலை 5.52 மணி வரை.

மீனம்

வாதிடும் திறன் அதிகமுள்ளவர்களே! கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும் மனஉளைச்சலையும், அலைச்சலையும் தந்து கொண்டிருந்த சூரியன் இப்போது உங்கள் ராசிக்கு 6ல் நுழைந்திருப்பதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். குழப்பங்கள் நீங்கும். கணவன், மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும்.

எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும். 27ம் தேதி வரை புதன் சாதகமாக இருப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். 28ம் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் மறைவதால் சின்னச் சின்ன எதிர்ப்புகள், யூரினரி இன்பெஃஷன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தடைப்பட்ட கல்யாணம் முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். வங்கியிலிருக்கும் நகையை திருப்பி அதிக ரூபாய்க்கு அடகு வைப்பீர்கள். வாகனப் பழுது சரியாகும். 8ம் வீட்டில் குரு தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். என்றாலும் சனி சாதகமாக இருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிட்டும்.

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள்.

புதிதாக அறிமுகமாகும் நண்பர்களிடம் கவனமாக பழகுங்கள். வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். வேலையாட்களை மாற்றி விட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். பெரியளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.

உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். உணர்ச்சிவசப் படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படவேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24, 31 மற்றும் செப்டம்பர் 1, 3, 5, 6, 9, 10, 11.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 17, 18ம் தேதி மாலை 4.29 மணி வரை மற்றும் செப்டம்பர் 12ம் தேதி மாலை 5.52 மணி முதல் 13, 14ம் தேதி வரை.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்