வட கொரியா மண்ணில் காலடி வைத்து வரலாறு படைத்தார் டிரம்ப்

Report Print Basu in ஆசியா

அமெரிக்க ஜனாபதிபதி டொனால்ட் டிரம்ப், வட கொரிய மண்ணில் காலடி வைத்த முதல் பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

ஜப்பானில் நடந்த ஜி 20 மாநாட்டில் கலந்துக்கொண்ட டிரம்ப், அங்கிருந்து தென் கொரியா புறப்பட்டார். தலைநகர் சியோலில் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் உடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக, ஜப்பானில் இருந்து தென் கொரியா புறப்படுவதற்கு முன் பேட்டியளித்த டிரம்ப், இந்த பயணத்தின் போது வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். விருப்பத்தை ஏற்ற கிம் ஜாங் உன், சந்திப்பை உறுதி செய்தார்.

இந்நிலையில், இன்று இரு நாட்டு தலைவர்களும் தென் கொரியா-வடகொரியா இடையே உள்ள இராணுவ நடவடிக்கை இல்லாத மண்டலத்தில் சந்திப்பில் ஈடுபட்டனர். இதன் போது, டிரம்ப், கிம் ஜாங் உன் உடன் வட கொரியாவிற்குள் காலடி வைத்தார். இதன் மூலம் வட கொரிய மண்ணில் காலடி வைத்த முதல் பொறுப்பில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

இதுவரை, இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மட்டுமே வட கொரியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்: யூன் 1994 ஆம் ஆண்டு ஜிம்மி கார்ட்டர், ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டு பில் கிளிண்டன் மற்றும் ஆகஸ்ட் 2010 ஆண்டு மீண்டும் கார்ட்டர். இருவரும் பதவியில் இருந்து வெளியேறிய பிறகே வட கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவிற்குள் நுழைந்தது பெரிய மரியாதை என குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறு வட கொரிய தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை, எந்த வட கொரிய தலைவரும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்