2 வாரங்களில் 400 பேருக்கு எச்.ஐ.வி... பெரும்பாலோனர் குழந்தைகள்: வெளியான காரணம்

Report Print Basu in ஆசியா

பாகிஸ்தானில் இரண்டு வாரங்களில் 400 பேர் எச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலோனர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானாவின் புறநகர்ப் பகுதியான வஸாயோ கிராமத்தைச் சேர்ந்தவர்களே எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறான உபகரணங்கள் மற்றும் தவறான முறையை பயன்படுத்துவதன் காரணமாக நாட்டில் நோய்த்தொற்று விகிதங்கள் அதிகரித்து வருவதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

நோயாளிகள் அதிகளவில் வருகிறார்கள், அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை சேமிப்பதற்காக, மருத்துவர்கள் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்கு சோதனை செய்ய பயன்படுத்தியதே எச்.ஐ.வி தொற்றுக்கான முக்கிய காரணம் என சிந்து மாகாண ஏய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் திட்ட மேலாளர் சிகந்தர் மெமோன் தெரிவித்துள்ளார்.

எச்.ஐ.வி நோய் தொற்று குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் கூறியதாவது, இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மருத்துவருக்கும் எச்.ஐ.வி தொற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மருத்துவர், தெரிந்தே நோயாளிகளுக்கு எச்.ஐ.வி வைரஸை பரப்பியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறுத்துள்ளார்.

நாங்கள் உதவியற்றவர்கள் என கதறும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விகுறியாக உள்ளது என வருந்துகின்றனர்.

எச்.ஐ.வி-யை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாகிஸ்தானில், 2017 ல் மட்டும் சுமார் 20,000 புதிய எச்.ஐ.வி தொற்றுக்கள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஆசியாவில் உள்ள நாடுகளில் எச்.ஐ.வி வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நாடாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers